இடுக்கி: மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகரான பூஜப்புரா ரவி காலமானார், அவருக்கு வயது 86.
மேடை நாடக நடிகராக திரையுலகில் அடியெடுத்து வைத்த பூஜப்புரா ரவி, சுமார் 800 படங்களில் நடித்துள்ளார்.
காமெடி முதல் பலவகையான கேரக்டரில் நடித்துள்ள பூஜப்புரா ரவி மறைவு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பூஜப்புரா ரவி காலமானார்: மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் பூஜப்புரா ரவி. 1936ம் ஆண்டு பிறந்த இவர் தனது இளம் வயது முதலே நடிப்பில் மிக ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் ஆரம்ப காலங்களில் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின்னர் கறுப்பு வெள்ளை சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பூஜப்புரா ரவி 2016ம் ஆண்டு வரையிலும் நடித்துள்ளார்.
காமெடி காட்சிகளில் நடித்து புகழ்பெற்ற பூஜப்புரா ரவிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். கல்லன் கப்பலில் தானே, ரவுடி ராமு, ஓர்மகள் மரிக்குமோ?, அம்மினி அம்மாவன், முத்தாரம் குன்னு பிஓ, பூச்சக்கொரு மூக்குத்தி, லவ் இன் சிங்கப்பூர், ஆனக்கொரும்மா, நந்தி விழுந்து வரிக, மழை பெய்யுன்னு. மாடலம் கொட்டுன்னு, கடடநாடன் அம்பாடி, மஞ்சாடிக்குரு ஆகியவை பூஜப்புரா ரவி நடித்த முக்கியமான படங்களாகும்.
ரவிந்திர நாயர் என்ற இயற்பெயருடைய இவர் திருவனந்தபுரம் அருகேயுள்ள பூஜப்புரா ஊரில் பிறந்துள்ளார். மேடை நாடகத்தில் நடித்தபோது ‘ரவி’ என்ற பெயரில் பிரபலமான இவர், அவரது ஊரின் பெயருடன் ‘பூஜப்புரா ரவி’ என ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுவிட்டார். இறுதிவரை பூஜப்புரா ரவி என்ற பெயரிலேயே நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இடுக்கியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார் பூஜப்புரா ரவி. வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த அவர், இன்று காலமானார். மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பூஜப்பூரா ரவியின் மரணம். இதனையடுத்து மம்முட்டி, மோகன்லால் உட்பட முன்னணி நடிகர்கள் பூஜப்புரா ரவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.