வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்-அமெரிக்கா – சீனா இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக சீனா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் காங்கை சந்தித்து பேசினார்.
அமெரிக்கா – சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரண மாக இரு நாடுகளும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன.
சீனா உரிமை கொண்டாடும் தைவான் நாட்டுடன் அமெரிக்கா வர்த்தக உறவை தொடர்வது, சீனா மற்றும் ஹாங்காங்கில் நிலவி வரும் மனித உரிமை மீறல்கள், தெற்கு சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது உட்பட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர் இந்தோனேஷியாவின் பாலியில் கடந்த ஆண்டு சந்தித்த போது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் சீன பயணம் குறித்து பேசினர்.
அதன் பின், அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலுான் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்துக்கு பின், இந்த சந்திப்பில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், இரண்டு நாள் பயணமாக பீஜிங் வந்துள்ளார்.
இங்கு துாதரக அளவிலான, உயர்மட்ட பேச்சு நடத்துகிறார்.
நேற்று, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் காங்கை சந்தித்து பேசினார்.
இதன் தொடர்ச்சியாக, சீன அதிபர் ஜின்பிங்கை இன்று சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் சந்திப்பு குறித்து இருதரப்பும் அதிகாரப்பூர்வ விபரங்களை வெளியிடவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement