திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் வழங்காததால் கல்லூரி படிப்பு தடைப்பட்ட காரணமாக பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.
அப்போது சாதி சான்று இல்லாததால், மாணவியின் உயர்கல்வி கேள்வி குறியானது. இதனால் மனமுடைந்த அவர், சனிக்கிழமை (ஜுன் 17-ம் தேதி) அன்று தற்கொலைக்கு முயன்றதால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து, திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் மாணவி ராஜேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், ‘பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த தனக்கு, எஸ்சி சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் வழங்கவில்லை. இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. என்னுடன் படித்த மாணவிகள், கல்லூரியில் படிக்க செல்கின்றனர். சாதி சான்றிதழ் இல்லாததால், கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு, நிறைவேறாததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்” என தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.ராமதாஸ் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக பட்டியலின பிரிவு சாதி சான்றிதழ் வழங்கவில்லை. ஜாதி சான்றிதழ் கேட்டு வழங்கப்படும் விண்ணப்பங்களை நிராகரிக்கின்றனர். இதற்கான காரணத்தை தெரிவிப்பது கிடையாது. இதனால், பன்னியாண்டி சமுதாய மாணவர்களின் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணம் தடைப்பட்டுபோகிறது. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களை போல், பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களும் உயர்கல்வி படிப்பதற்கு, சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.