சென்னை: தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசிய திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து டிஸ்மிஸ் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
திமுக பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பலரும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் தலைமைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கண்டித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். | வாசிக்க > “என்னை சீண்டாதீங்க” – செய்தியாளர் சந்திப்பில் கண்கலங்கிய குஷ்பு