புதுடெல்லி: இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
102-வது ‘மனதின் குரல்’ (‘மன் கீ பாத்’) நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
வழக்கமாக, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. அடுத்த வாரம் அரசுமுறை பயணமாக நான் அமெரிக்கா செல்வதால் ஒரு வாரம் முன்னதாகவே இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
பிபர்ஜாய் அதிதீவிர புயலால் குஜராத்தின் கட்ச் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், அப்பகுதி மக்கள் மிகுந்த மனஉறுதியுடன் இதை எதிர்கொண்டனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்ட கட்ச் பகுதி, புயல் பாதிப்புகளில் இருந்தும் விரைவில் மீண்டெழும்.
இப்போது பருவமழை காலம் தொடங்கியுள்ளது. இந்த காலத்தில் மழைநீரை சேமிக்க வேண்டும். உத்தர பிரதேசத்தின் பாந்தா மாவட்டம் லுக்தரா கிராமப் பஞ்சாயத்தின் தலைவராக உள்ள துளசிராம் யாதவும், கிராம மக்களும் சேர்ந்து 40-க்கும் மேற்பட்ட குளங்களை வெட்டினர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சாகுபடி அதிகரித்துள்ளது. வறட்சி, குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. உத்தர பிரதேசத்தின் ஹாபுட் மாவட்டத்தில் ஒருகாலத்தில் பாய்ந்த நீம் என்ற நதி, அப்பகுதி மக்களின் தீவிர முயற்சியால் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
நமது நோக்கம் நேர்மையாக இருந்தால் எத்தகைய இலக்கையும் எட்டிப்பிடிக்க முடியும். அந்த வகை யில், வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறேன்.
காசநோய் ஒழிப்பில் நிக்சய் மித்ரா என்ற அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பினர் ஆயிரக்கணக்கான காசநோயாளிகளை தத்தெடுத்து பராமரித்து வருகின்றனர். இன்று நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த புண்ணியச் செயலுக்கு வித்திட்ட நிக்சய் மித்ராவின் 85,000 உறுப்பினர்களையும் பாராட்டுகிறேன்.
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமி நளினி தனது சேமிப்புத் தொகை மூலம், காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வருகிறாள். இதேபோல, ஏராளமான சிறுவர்கள் காசநோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன்.
ஆசிரியர் உருவாக்கிய வனம்
கேரளாவை சேர்ந்த ஆசிரியர் ராமநாதன், ஒரு சிறிய மியாவாக்கி வனத்தை உருவாக்கி, ‘வித்யாவனம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். அங்கு நூற்றுக்கணக்கான மூலிகைகள், தாவரங்கள், இருக்கின்றன. வனத்தை பராமரிக்க அவரது மாணவர்கள் உதவுகின்றனர்.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. உலகம் ஒரு குடும்பம் என்பதே இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் நான் பங்கேற்கிறேன்.
யோகாவை கடைபிடியுங்கள்
நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்பாக யோகாவை கடைபிடிக்க வேண்டுகிறேன். யோகாவுடன் இணையும்போது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் தற்போது சமூக மற்றும் வளர்ச்சி பணிகளோடு தொடர்பு உடையதாக மாறிவிட்டன. காசநோய் இல்லாத இந்தியா, இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆளுநர் மாளிகைகளில் நடைபெறுகின்றன. குஜராத், கோவா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சிக்கிம் மாநிலங்களின் நிறுவன தினம், ஆளுநர் மாளிகைகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டன. ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வுக்கு இது வலுசேர்க்கிறது.
1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதியை மறக்க முடியாது. இந்த நாளில்தான் நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இது இந்திய வரலாற்றில் கறுப்பு அத்தியாயம் ஆகும். அவசரநிலையை எதிர்த்த பல லட்சம் மக்களுக்கு எதிராக கொடுமைகள், அநீதிகள், சித்ரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. எத்தனை துன்பத்துக்கு அவர்கள் ஆளானார்கள் என்பதை நினைக்கும்போது மனம் கொந்தளிக்கிறது.
நாட்டின் சுதந்திரத்தை ஆபத்துக்கு உள்ளாக்கிய இத்தகைய குற்றங்கள் குறித்த மீள்பார்வை அவசியம். இதன்மூலம், ஜனநாயகத்தின் மகத்துவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் பேசினார்.