ஆஷஸ் டெஸ்ட்: 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 28/2 – மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தம்

பர்மிங்காம்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், சாக் கிராலி 61 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 14 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் டேவிட் வார்னர் 9 ரன்னில் அவுட்டானார். லாபுசேன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்மித் 16 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கவாஜா- டிராவிஸ் ஹெட் ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில், ஹெட் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். கிரீன் 38 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. கவாஜா 126 ரன்னும், அலெக்ஸ் கேரி 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதல் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்படி அலெக்ஸ் கேரி 66 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த கவாஜா 141 ரன்களில் , ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கம்மின்ஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நாதன் நியான் 1 ரன், ஸ்காட் போலண்ட் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் . இறுதியில் 10 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி 386 ரன்களில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து சார்பில் பிராட் , ராபின்சன் தலா 3 விக்கெட்டும் , மொயீன் அலி 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து இங்கிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலையுடம் 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான பென் டுக்கெட் 19 ரன்களும், குருவ்லே 7 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை அதிகரித்ததால் போட்டிக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி நாளை 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இங்கிலாந்து அணி 10.3 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் எடுத்து 35 ரன்கள் முன்னிலையுடன் நாளை ஆட்டத்தை தொடர உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.