கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். இவர் தன்னை ஸ்கின் டாக்டர் என்றும், பழைமையான பொருள்கள் சேகரிப்பாளர் என்றும், மோட்டிவேசன் ஸ்பீக்கர் என்றும், தெலுங்கு சினிமா நடிகர் எனவும் கூறிக்கொண்டு சுமார் 24 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவந்துள்ளதாக 2021-ம் ஆண்டு புகார் எழுந்தது. புருனே சுல்தானின் கிரீடத்தை வெளிநாட்டில் விற்பனை செய்ததில் தனக்கு 70,000 கோடி ரூபாய் வரவேண்டி உள்ளது. அதற்கு வரி செலுத்த பணம் கொடுத்தால் வட்டி இல்லாமல் நூறு கோடி ரூபாய் லோன் வாங்கித்தருவதாக 6.27 கோடி ரூபாய் வாங்கியதாக மோன்சன் மாவுங்கல் மீது சேர்த்தலாவைச் சேர்ந்த ஷாஜி என்பவர் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் கேரள க்ரைம் பிரன்ச் போலீஸார் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி மோன்சன் மாவுங்கல்லை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மோன்சன் மாவுங்கல் மீது மேலும் சில புகார்கள் பதிவாயின. அதில் மோசடி வழக்கு மற்றும் பாலியல் வழக்குகளும் அடங்கும்.
மோன்சன் மாவுங்கல்லின் ஒரு மோசடி வழக்கில் கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரனுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னிடம் வேலைச்செய்த பெண்ணின் மகளை 2019 ஜூலை மாதம் சிறார் வதை செய்ததாக மோன்சன் மீது பதியப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. மோன்சன் மாவுங்கல் தன்னிடம் வேலை செய்த ஒரு பென்ணின் 17 வயது மகளை படிக்க உதவுவதாக கூறி பலமுறை சிறார் வதை செய்துள்ளார். இந்த சம்பவத்துக்கு மோன்சன் மாவுங்கல்லின் மேலாளராக இருந்த ஜோஷியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த போக்சோ வழக்கில் ஜோஷி முதல் குற்றவாளியாகவும், மோன்சன் மாவுங்கல் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு எர்ணாகுளம் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த போக்சோ வழக்கில் மோன்சன் மாவுங்கல்லுக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு ஆயுள் தண்டனைகளை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டும். அதாவது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் எனவும், 5.25 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.