தெற்கு வங்க கடலில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரை மழை தொடர்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் தொடரும் கனமழை காரணமாக சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. குறிப்பாக துபாய், அபுதாபி, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர் உட்பட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமிட்டு பறந்தன.
இதனை அடுத்து பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. சென்னையில் உள்நாட்டு விமான சேவை மட்டும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், துபாய், லண்டன் உள்ளிட்ட 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.