புவனேஷ்வர்,
மாநிலங்களுக்கு இடையிலான 62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்றில் கேரள வீரர் முரளி ஸ்ரீசங்கர் 8.41 மீட்டர் நீளம் தாண்டி இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.
தனிப்பட்ட முறையில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு 8.25 மீட்டர் தூரமும், ஆசிய விளையாட்டுக்கு 7.95 மீட்டரும் தகுதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதை எட்டி விட்ட முரளி ஸ்ரீசங்கர் ஆகஸ்டு மாதம் புடாபெஸ்டில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கும், சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.