நடிகர் வடிவேலு போலீஸாக நடித்த ஒரு படத்தில், ஒரு பெண்ணுக்கு பலர் உரிமை கோரி போலீஸ் நிலையத்திற்கு வருவதை பார்த்திருக்கிறோம். அது போன்ற ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் பிங்கி என்ற இளம் பெண்ணிற்குத்தான் இந்த பஞ்சாயத்து நடந்தது.
ஜான்சி நகரில் வசிப்பவர் பிங்கி. அருகில் உள்ள ஜலுன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுக்ராம். இவர் தனது மனைவி பிங்கியை தன்னுடன் சேர்த்து வைக்கவேண்டும் என்று கோரி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். உடனே பிங்கியை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
அவருடன் வேறு ஒரு வாலிபரும் வந்தார். இரண்டாவதாக வந்த வாலிபரும் பிங்கியை தன்னுடன் அனுப்பவேண்டும் என்றும், அவரை நீதிமன்றம் மூலம் திருமணம் செய்து கொண்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார். முதலில் வந்த சுக்ராம் என்ற வாலிபர், தான் அரசு சார்பாக ஒரே இடத்தில் மொத்தமாக நடத்தி வைத்த இடத்தில் பிங்கியை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். இதனால் இரண்டு கணவர்களிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருவரும் பிங்கியை தன்னுடன் தான் அனுப்பவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். போலீஸார் பிங்கியுடன் பேசினர். முதல் கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்ததாகவும், ஒரு ஆண்டாக சித்ரவதையை தாக்கிக்கொண்டதாகவும், அதன் பிறகுதான் அவரை விட்டு பிரிந்து சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் பிரிந்து சென்ற பிறகு ரானிப்பூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு அவரையே நீதிமன்றம் மூலம் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தான் இரண்டாவது கணவருடன் தான் வாழப்போவதாகவும் தெரிவித்தார்.
இதனால் பிங்கியை இரண்டாவது கணவருடன் அனுப்பி வைத்தனர். மேலும் முதல் கணவர் அடித்து உதைத்து சித்ரவதை செய்வதாக பிங்கி தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். போலீஸ் நிலையத்தில், 6 மணி நேரமாக நடந்த பஞ்சாயத்து இறுதியில் முடிவுக்கு வந்தது.