லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் திடீரென வெறும் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கான காரணம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்தாண்டு கோடைக் காலம் ரொம்பவே மோசமாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு பல இடங்களில் வெப்பம் அலை ஏற்பட்டது. மதிய நேரத்தில் வெளியே செல்லக் கூட முடியாத நிலை இருந்தது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டது. மார்ச், ஏப்ரல் மாதம் ஆரம்பித்த இந்த வெயில் வட இந்தியாவில் இன்னுமே முடிவுக்கு வரவில்லை. அங்கே பல மாநிலங்களில் வானிலை மையம் வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசம்: கடந்த 3 நாட்களில் உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் மட்டும் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 15ஆம் தேதி 23 பேர், ஜூன் 16இல் 20 பேர் ஜூன் 17ஆம் தேதி 11 பேர் என மொத்தம் 54 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கே இதுவரை இல்லாத அளவுக்கு உட்சபட்ச வெப்பம் பதிவானதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என முதலில் அங்குள்ள அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இது தொடர்பாக விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது.
இது குறித்து அங்குள்ள மூத்த டாக்டர் ஏகே சிங் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் இது வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட மரணங்களாகத் தெரியவில்லை.. அண்டை மாவட்டங்களிலும் வெயில் அதிகமாகவே இருந்துள்ளது. இருப்பினும், அங்கே உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், மருத்துவமனைக்கு வந்த பெரும்பாலான நோயாளிகளின் ஆரம்ப அறிகுறி நெஞ்சு வலியாகவே இருந்துள்ளது. வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்பின் அறிகுறி இது இல்லை.
என்ன காரணம்: இந்த திடீர் மரணம் என்பது தண்ணீருடன் தொடர்புடையதாக இருக்கலாம்.. உயிரிழப்புகள் தண்ணீரால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும். காலநிலை துறை அப்பகுதியில் இருக்கும் தண்ணீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும்” என்றார்.
முன்னதாக நேற்றைய தினம் பல்லியாவின் தலைமை மருத்துவர் பொறுப்பில் இருந்த ஒருவர், வெப்ப அலை காரணமாகவே இந்த மரணங்கள் ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். அவரது இந்த கருத்து இணையத்தில் டிரெண்டான நிலையில், அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்புகள் என முறையான தகவல் இல்லாமல் கவனக்குறைவாகப் பேட்டி அளித்தாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள்: வெறும் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பாஜக அரசை சாடியுள்ளார். அவர் கூறுகையில், “இந்த உயிரிழப்பிற்கு உத்தரப்பிரதேச அரசின் கவனக்குறைவே முக்கியமான காரணம்.. கடந்த 6 ஆண்டுகளில் உ.பி.யில் ஒரு மாவட்ட மருத்துவமனை கூட கட்டப்படவில்லை. சரியான நேரத்தில் உணவு, மருந்து மற்றும் சிகிச்சை கிடைக்காதவர்களே உயிரிழந்துள்ளனர்” என்று அவர் விமர்சித்துள்ளார்.
பல்லியாவில் நடந்த சம்பவத்தை உபி அரசு கவனித்து வருவதாகவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் உபி சுகாதார அமைச்சர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.
திடீரென ஒரே நேரத்தில் பலர் மருத்துவமனைகளை முற்றுகையிட்டுள்ளதால் அங்கே ஒரு வித பதற்றமான சூழலே நிலவுகிறது. மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகள் அட்மிட் கூட ஆக முடியாத அளவுக்குக் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.
ஸ்ட்ரெச்சர்கள் கூட போதியளவில் இல்லாமல் நோயாளிகளை அவசர சிகிச்சைப் பிரிவுக்குத் தோளில் சுமந்து செல்லும் சூழல் நிலவுகிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்கள் திடீரென மருத்துவமனைக்கு வந்ததே இதற்குக் காரணம் என்றும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.