என் குடும்பத்துக்கு சோறு போடும் சினிமா!: முத்துக்காளை

'செத்து செத்து விளையாடுவோமா?' – என் புருசன் குழந்தை மாதிரி படத்தின் இந்த ஒரு வசனம் போதும்; நகைச்சுவை நடிகர் முத்துக்காளைக்கு வேறு சிறப்பு அறிமுகம் தேவையில்லை! அவரிடம் ஒரு பேட்டி:

ஆணழகன் முத்துக்காளையின் காதல் அனுபவம்?
அட ஏங்க… அது இல்லாமத்தானே 'செத்து செத்து விளையாடுவோமா'ன்னு திரியுறேன்! ஆனா, 'காதல்' மேல எனக்கு பெரும் காதல் உண்டு; என்னன்னு தெரியலை… அதுக்கும் என்னை பிடிக்கலை; நெருங்கவே இல்லைங்க!

சரி… அதை விடுங்க; 2,000 ரூபாய் கட்டு எல்லாம் மாத்தியாச்சா?
'பத்து கிலோ அரிசி வேணும்'னு மனைவி கேட்டா, இரண்டு கிலோ வாங்கித்தந்து 'அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'ன்னு சொல்றேன்; என்கிட்டே இந்த கேள்வி நியாயமா?

'இலவசம்' பற்றி என்ன நினைக்கிறீங்க?
கோவில் பிரசாதத்தை கூட, 'இந்தாங்க…'ன்னு கொடுத்தா மட்டும்தான் வாங்கணும்; இல்லாதவன் வாங்குற இடத்துல, இருக்குறவன் கை நீட்டுறது இல்லாதவனுக்கு செய்ற துரோகம்; இருக்குறவனுக்கு அவமானம்!

'ஸ்டன்ட் மேன்' கனவுல சினிமாவுக்கு வந்ததா…
நீங்க கேள்விப்பட்டது உண்மைதான்; 'கராத்தே'யில 'பிளாக் பெல்ட்' வாங்கியிருக்கேன்; இப்பவும், நாள் தவறாம 'ஜிம்'முக்கு போறேன்; 'ஜிம்னாஸ்டிக்' பயிற்சி எடுக்குறேன்! என் விதி… விரும்பினது கிடைக்கவே இல்லை!

நீங்க நேசிக்கிற அளவுக்கு சினிமா உங்களை நேசிக்குதா?
நான் நடிச்ச முதல் படம் பொன்மனம். இப்போ, 200 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். கைவசம் பத்துக்கும் அதிகமான படங்கள் இருக்கு. 26 ஆண்டுகளா என் குடும்பத்துக்கு சோறு போடுதுங்க இந்த சினிமா!

உங்களைப் பற்றி ஒரு பெரும் உண்மை…
'இவனெல்லாம் ஒரு ஆளுன்னு தேடி வந்து 'செல்பி' எடுக்குறாய்ங்க பாரு'ன்னு அஞ்சு வருஷம் முன்னாடி வரைக்கும் மனைவி கேவலமா திட்டியிருக்காங்க; என் குடிப்பழக்கத்தால அவங்க சந்திச்ச அவமானங்கள் அப்படி! இப்போ நான் திருந்திட்டேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.