சென்னை: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த ஜி20 அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது.
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்து ஆலோசிப்பதற்கான மூன்றாவது நிதி செயற்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டத்தின் முதல் கூட்டம் கவுகாத்தியிலும், இரண்டாம் கூட்டம் உதய்பூரிலும் நடைபெற்ற நிலையில், 3வது கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கி உள்ளது. இதில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது குறித்தும், நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்காக நிதியை செயல்படுத்துவது குறித்தும், சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பசுமை மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கான தனியார் மூலதனத்தை ஆதரிக்கும் கொள்கைகள் மற்றும் நிதிக் கருவிகள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், சிந்தனைக் குழுக்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். நிலையான நிதி செயற்குழு கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளின் தொடக்க அமர்வில் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்தியத் தலைவர் கீது ஜோஷி, பொருளாதார விவகாரத் துறையைச் சேர்ந்த சாந்தினி ரெய்னா ஆகியோர் உரையாற்றினர். இந்த 3 நாள் கூட்டத்தில் சீனா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.