அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13 ஆம் தேதி அமலாக்காத்துறையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தார் என்ற வழக்கின் அடிப்படையில் அமக்காத்துறையினர் அவரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவருக்கு இதயத்தில் மூன்று முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் ஓமந்தூர் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பிய செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவருக்கு வரும் புதன் கிழமை அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக நாடகமாடினார் என குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் செய்தியாளர்களை சந்தித்த விபி துரைசாமி, இயக்குநர் பாலச்சந்தர் இப்போது இல்லை. அவர் இருந்திருந்தால் இப்படி ஒரு அற்புதமான கதாநாயகன் கிடைத்து விட்டாரே என செந்தில்பாலாஜியை வைத்து நெஞ்சுவலி என்ற படத்தை எடுத்திருப்பார் என கூறியுள்ளார்.
மேலும் நெஞ்சுவலி வந்த யாராவது, எனக்கு நெஞ்சுவலிக்கிறது என வேகமாக கத்துவார்களா? கத்த முடியுமா? என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். நெஞ்சுவலி என நடித்து விட்டு விசாரணையில் செந்தில்பாலாஜி தப்பிக்க பார்ப்பதாகவும் விபி துரைசாமி குற்றம்சாட்டியுள்ளார்.