சென்னை: Gangai Amarana (கங்கை அமரன்) இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் நடிகை கனகா குறித்து சமீபத்திய பேட்டியில் உருக்கமாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தேவிகா. இவரது மகள் கனகா. தன்னை போல் கனகா நடிகையாக வரக்கூடாது என்பதில் தேவிகா ரொம்பவே தீவிரமாக இருந்தவர். ஆனால் கனகாவும் சினிமாவில் நடிக்க வேண்டிய சூழல் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனால் உருவானது.
கரகாட்டக்காரன்: பாடலாசிரியராக பிரபலமடைந்த கங்கை அமரன் ராமராஜனை வைத்து கரகாட்டக்காரன் படத்தை இயக்க முடிவு செய்தார். ஆனால் படத்தில் நடிப்பதற்கு ஹீரோயின் மட்டும் கிடைக்கவில்லை. அவரது நடத்திய ஹீரோயின் தேடல் படலத்தில் அவர் நினைத்த மாதிரி யாரும் கிடைக்காததால் என்ன செய்வதென்று யோசித்தார். அந்த சமயத்தில் அவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேவிகா தனது மகள் கனகாவுடன் கலந்துகொண்டார். அப்போது தேவிகாவிடம் பேசி அவரை சமாதானம் செய்து கனகாவை ஹீரோயினாக கமிட் செய்துவிட்டார் கங்கை அமரன்.
மெகா ஹிட் கரகாட்டக்காரன்: தேவிகாவுக்கு விருப்பம் இல்லாமல் அரைகுறை மனதோடு ஒத்துக்கொண்டார். அதுமட்டுமின்றி இந்தப் படம் ஒன்று தோல்வி அடையும், இல்லை சுமாராக ஓடும் என நினைத்திருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக படம் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. கனகாவின் நடிப்பும் அசுரத்தனமாக இருக்க இது அவருக்கு முதல் படமா என்ற கேள்வியையே பலரும் முன்வைத்தனர்.
தனிமையில் கனகா: அதனையடுத்து கனகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு தனது தாய் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் பிறகும் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக திரையுலகிலிருந்து ஒதுங்கி ஒட்டுமொத்தமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து யாரும் அவரை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் கனகாவை அறிமுகப்படுத்திய கங்கை அமரன் உருக்கமாக பேசியிருக்கிறார்.
கங்கை அமரன் பேட்டி: சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “அவருடைய (கனகாவின்) வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அவர் எண்ணம் எல்லாம் அதில்தான் நிறைந்திருக்கிறது. ஏதோ ஒரு தோல்வியை அவர் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார். அதனால்தான் யாருமே வாழ்க்கையில் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார். எனக்கு கனகாவை பார்க்க வேண்டும் என்று ஆசை. இந்த நேரத்தில்தான் ஆதரவு தர வேண்டும். ஆனால் அவர் அழைக்க மாட்டார்.
இந்த பேட்டியை பார்த்தாவது அவர் என்னை அழைக்க வேண்டும். வீட்டு கதவையும் பூட்டிவிட்டார். யாரும் உள்ளே போக முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. யார் சென்றாலும் அவருக்கு தெரியாது. சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார் என்பதுகூட தெரியவில்லை. வீட்டிற்குள் எப்படி போவது என்றே தெரியவில்லை. எதற்கு ஒரு பெண் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? பாவம்! அவரை எப்படி சரி செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை. பேசாமல் என்னை பார்சல் செய்து அவள் வீட்டுக்கு அனுப்பிவிடலாம்” என்றார்.