ஆணவக் கொலை… மகளையும் காதலனையும் கொன்று முதலைக்கு தீனியாக போட்ட அப்பா!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காதலுக்கு எதிரான ஆணவக் கொலைகள் தொடர்ந்து வருகின்றன. ஆணவக் கொலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆணவக் கொலைகள் குறைந்ததாக தெரியவில்லை.

பட்டப்பகலில், நட்ட நடுரோட்டில், ஊரார் உறவினர் முன்பு என ஆணவக் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளன. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ள ஒரு ஆணவக் கொலை ஒட்டு மொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது.

மத்திய பிரதேசம் மொரேனாவின் ரத்தன்பாசி கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம் பெண் ஷிவானி தோமர். இவர் அருகிலுள்ள பலுபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் தோமர் என்ற 21 வயது இளைஞரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு ஷிவானி தோமரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தனது காதலை கைவிடாத ஷிவானி தோமர், எதிர்ப்பையும் மீறி தனது காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ராதிஷ்யம் தோமர் கடந்த 3 ஆம் தேதி மாயமானார். அதே நாளில், ஷிவானியும் மாயமானார். இதையடுத்து காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால் இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டதாக இளைஞரின் பெற்றோரும் கிராமத்தினரும் நம்பியுள்ளனர்.

இதையடுத்து இருவரும் மாயமானது குறித்து ராதிஷ்யம் தோமரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். போலீசார் பெண் வீட்டாரிடம் நடத்திய விசாரணையில்தான் அந்த அதிர்ச்சிகர தகவல் வெளியானது. அதாவது ஷிவானி தோமரின் தந்தை ராஜ்பால் தனது மகளையும் அவரது காதலனையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று இருவரது உடல்களையும் கல்லைக் கட்டி சாம்பல் ஆற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார்.

சம்பல் ஆற்றில் நூற்றுக் கணக்கான முதலைகள் உள்ள நிலையில் மகளையும் மகளின் காதலனையும் சுட்டுக்கொன்று அவர்களின் உடலை அந்த முதலலைகளுக்கு தீனியாக போட்டுள்ளார் பெண்ணின் தந்தை. இதனை கேட்ட அந்த கிராமமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. உடல் வீசப்பட்ட இடத்தை பெண்ணின் தந்தை அடையாளம் காட்டியதை அடுத்து இருவரது உடல்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.