பெய்ஜிங்: நம்ம ஊர் இளைஞர்கள் நல்ல கம்பெனியில் வேலைக்குத் திண்டாடி வரும் நிலையில், சீன இளைஞர்கள் அதிக ஊதியத்தைத் தரும் வேலையை விட்டு சின்ன சின்ன வேலைகளுக்குச் செல்கிறார்களாம்.
நம்ம ஊரில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பட்டம் பெற்றவர்கள் கூட பல லட்சம் பேர் இங்கே க்ரூப் 4 தேர்வுகளை எழுதுகிறார்கள்.
அவ்வளவு ஏன் பல ஆயிரம் பேர் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் டெலவரி பாய்களாக வேலை செய்து வருவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால், சீனாவில் இதற்கு நேர்மாறாக நடந்து வருகிறதாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக நாடுகள்: கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது.. உலகின் டாப் பொருளாதாரங்கள் கூட இப்போது திணறி வருவதே இதற்கு உதாரணம். அமெரிக்கா, ஐரோப்பியா என எந்தவொரு நாடும் இதில் இருந்து தப்பவில்லை. இதனால் அந்நாட்டில் வேலையிழப்பும் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. கூகுள், பேஸ்புக், ட்விட்டர் என அனைத்து டாப் நிறுவனங்களும் ஆட்குறைப்பில் இறங்கின. டாப் நிலையில் இருந்த ஊழியர்களும் வேலையை விட்டு நீக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்தன.
வேலைவாய்ப்பு மார்கெட் இவ்வளவு இக்கட்டானதாக மாறியுள்ள நிலையில், இப்போது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறக் கூட ஊழியர்கள் ஒரு முறைக்குப் பல முறை யோசிக்கிறார்கள். ஆனால், சீனாவில் இப்போது நடப்பதைப் பார்த்தால் உங்களால் நம்பவே முடியாது. ஏனென்றால், அங்குள்ள இளைஞர்கள் தங்கள் வேலைகளை அசால்டாக ரிசைன் செய்கிறார்களாம். இவர்கள் ஏதோ சின்ன சின்ன வேலைகளில் இருப்பவர்கள் என நினைக்க வேண்டாம்.
என்ன காரணம்: பல லட்சம் சம்பளம் வாங்கும் ஒயிட் காலர் வேலைகளை விட்டுவிட்டு இவர்கள் ஹோட்டலில் வெயிட்டர்களாகவும் க்ளீனர்களாகவும் வேலைக்குச் சேர்கிறார்களாம். அதற்கு இவர்கள் சொல்லும் காரணம் இன்னும் வியப்பாக இருக்கிறது. இதாவது இந்த வேலை தான் அதிக திருப்தி தருவதாகவும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை இவை உணர வைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுபோல ஒயிட் காலர் வேலையை விட்டு கடைநிலை ஊழியர்களாகச் சேரும் சீனா இளைஞர்கள் அங்கே இன்ஸ்டாகிராமிற்கு மாற்றாக இருக்கும் சியாங்சு தளத்தில் ‘My First Physical Work Experience’ என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் அனுபவத்தையும் பகிர்கிறார்கள். கடந்த ஓராண்டாகவே இப்படிப் பல ஆயிரம் இளைஞர்கள் ஒயிட் காலர் வேலையை விட்டுவிட்டு சாதாரண வெயிட்டராகவும் க்ளீனராகவும் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார்களாம். இவர்களுக்குச் சம்பளம் ரொம்பவே குறைவு. அதாவது கிட்டதட்ட தினக்கூலிகளைப் போன்ற வேலைகளில் சேர்கிறார்கள்.
வேலையை விடும் இளைஞர்கள்: குவாங்டாங் மாகாணத்தில் வசிக்கும் பெண் ஒருவர் முன்பு, பிரபல டெக் நிறுவனமான பைட் டான்ஸில் வேலை செய்து வந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு இப்போது அவர் பாஸ்ட் புட் கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில் அவருக்கு மிகக் குறைந்த வருமானமே கிடைத்தாலும் கூட இந்த வேலை தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் இரவில் படுத்தால் நிம்மதியாக உறங்க முடிவதாகவும் தெரிவிக்கிறார்.
அதேபோல கல்லூரிப் பட்டதாரியான மற்றொரு பெண், அதிக சம்பளம் தந்த கன்சல்டிங் வேலையை விட்டுவிட்டு இப்போது ஒரு காபி ஷாப்பில் வேலை செய்கிறார். “இத்தனை காலம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்து எனக்குப் போர் அடித்துவிட்டது. இதன் காரணமாக எனக்குள் ஒரு வெறுமை இருந்தது. உடல் உழைப்பு உடன் கூடிய வேலை எனக்கு வேண்டும் என்பதை உணர்ந்தேன். இப்போது என்னால் அதிக உற்சாகத்துடன் வேலை செய்ய முடிகிறது” என்றார்.
கணினியின் முன்னாலேயே அமர்ந்து கொண்டு 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டி இருப்பதால் சீன இளைஞர்கள் அதை வெறுப்பதாகவும் இதற்கு மாற்று வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என அந்நாட்டின் வல்லுநர்கள் கூறுகின்றனர்.