தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து தலையில் மண்ணென்னை ஊற்றி தீக்குளிப்பது போன்று நடித்த எலெக்ட்ரீசியன் ஒருவரின் கண்ணில் மண்ணென்னை பட்டதால், கண் எரிவதாக அலறி அழுது புரண்ட கூத்து அரங்கேறி உள்ளது.
தீக்குளிச்சா உடலே தீப்பற்றி எரியும் என்பது தெரிந்தும், தலையில் மண்ணென்னையை ஊற்றிக் கொண்ட நிலையில், தண்ணீர் ஊற்றி காப்பாற்றிய போலீசாரிடம், கண் எரிவதாக கூறி சின்ன பிள்ளை போல அழுது புரண்ட பச்சபுள்ள பாலமுருகன் இவர் தான்..!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் அடுத்த பசுவந்தனை அடுத்த கீழமங்கலம் கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியனான பாலமுருகன், கையில் மண்ணென்னை கேனை மறைத்து எடுத்துக் கொண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குள் வந்தார். பசுவந்தனை போலீசார் தன்னை தாக்கியதாக கூறி மண்ணெண்னையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அவர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றி தடுத்தனர்
அப்போது கண்ணுக்குள் மண்ணென்னை பட்டதால் கண் எரிவதாக கூறி அழுது புரளும் நிலைக்கு தள்ளப்பட்டார் பாலமுருகன். அந்த சோகத்திலும் தனது ஸ்மார்ட் போன் நனைந்து விட கூடாது என்று பக்குவமாக தள்ளி வைத்ததை காணமுடிந்தது
கண் எரிச்சலுக்கு தண்ணீரை ஊற்றச்சொல்லி கேட்க, போலீசார் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதாக கூறி , வேறு ஒரு இடத்தில் இருந்து குடத்தில் எடுத்து வந்து கண்ணிலும் தலையிலும் தண்ணீர் ஊற்றினர். நன்றாக அழுக்கு தேய்த்து குளிப்பது போல பாலமுருகன் தண்ணீரில் தலையை தேய்த்து குளித்தார்
தண்ணீர் ஊற்றி முடித்ததும் மீண்டும் கண் எரிவதாக சத்தம் போட்டு அழுத பாலமுருகனை கைத்தாங்கலாக தூக்கிய போலீசார், இந்த நடிப்பை எல்லாம் மூன்றாம் பிறை படத்திலேயே பார்த்துட்டோம் என்றவாறு சிப்காட் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
விசாரணையில் பசுவந்தனையில் அருணாச்சாலம் என்பவரை தாக்கிய வழக்கில் சிறை சென்று வந்த பாலமுருகன், ஜாமீனில் வெளியே வந்த பின்னர் பெண் ஒருவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், அந்தப்பெண் பணத்தை திருப்பி தராமல் தன்னை எமாற்றி விட்டதாகவும் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்த போது பாலமுருகன் தன்னுடன் பழகியதற்கு பணம் கொடுத்து விட்டு திருப்பி கேட்பதாக அந்தப்பெண் கூறியதால் போலீசார் வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் பாலமுருகனை விரட்டி விட்டதாக கூறப்படுகின்றது. மேலும் பழைய வழக்கில் ஜாமீன் பெற்ற பாலமுருகன் முறையாக கையெழுத்திடாததால் போலீசார் மீண்டும் பாலமுருகனை அழைத்து எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகின்றது. இதனால் பசுவந்தனை போலீசாரை பழிவாங்கும் நோக்கத்தில்
பாலமுருகன் தீக்குளிப்பு நாடகம் நடத்தியதாகவும், அது பூமராங் ஆகி மண்ணெண்ணை அவரது கண்ணுக்குள் இறங்கி கதற விட்டு இருப்பதாக சிப் காட் போலீசார் தெரிவித்தனர்.