சென்னை சாலைகளில் பகலில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கும், இரவில் 50 கிலோமீட்டர் வேகத்திற்கும் மேல் வாகனங்களை இயக்கினால் தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் எச்சரித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் காவல்துறையினருக்கு பல்வேறு உபகரணங்களை வழங்கியதோடு கூகுள் ட்ராபிக் அலர்ட் செயலியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “சென்னையில் பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். அதேபோன்று இரவில் 50 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட வேகத்தை தாண்டி வாகனங்களை இயக்கினால் அவர்கள் மீது தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.
சென்னையின் பல்வேறு சாலைகளில் ஸ்பீட் ரேடார் கன் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, அண்ணாநகர், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த கருவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி 40 கிலோ மீட்டருக்கு அதிகமாக செல்லும் வாகனங்களை படம் பிடித்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் மொபைல் எண்ணுக்கு வழக்கு பதிவு செய்த விவரங்களை உடனடியாக அனுப்பும்” என தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில வருடங்களாக போக்குவரத்தால் ஏற்படும் விபத்துக்கள் பெரும்பாலும் குறைந்துள்ளது. போக்குவரத்து காவலர்கள் விபத்து தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் சென்னையில் விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னை சாலைகளில் வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் இந்த விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்ததை தொடர்ந்து ஸ்பீட் ரேடார் கன் தொழில்நுட்பம் தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.