சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்க்கு படத்தில் இன்னும் 10 நாட்கள் மட்டுமே சூட்டிங் உள்ளதாகவும், அதை தொடர்ந்து மற்றவர்களின் போர்ஷன்கள், சில பேட்ச் வேலைகள் உள்ளதாகவும் லோகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், லியோ படம் குறித்தும் மாஸ்டர் படம் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
10 ஆண்டுகளில் சினிமாவில் இருந்து விலகும் லோகேஷ்: நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் டைட்டில் அறிவிப்புடன் துவங்கியது. தொடர்ந்து காஷ்மீரில் 52 நாட்கள் சூட்டிங் பல்வேறு சிரமங்களுக்கிடையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் விஜய் வாய்சில் உருவாகியுள்ள நா ரெடி பாடலின் சூட்டிங் தொடர்ந்து ஒரு வாரம் நடத்தப்பட்டது. மிகுந்த ரிகர்சலுக்கிடையில் பிரம்மாண்டமான அளவில் இந்த பாடல் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ், விஜய் உள்ளிட்டோர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதை அறிவித்துள்ளனர்.
விஜய்யின் பிறந்தநாளையொட்டி காமன் டிபியை வெளியிட்டு ரசிகர்கள் அதகளம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் விஜய்யுடனான உறவு, மாஸ்டர் அதை தொடர்ந்து லியோ படம் குறித்து லோகேஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய் ரசிகர்களுக்காக பல்வேறு விஷயங்களில் தான் சமரசம் செய்துக் கொண்டதாகவும் ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே லியோ படம் குறித்து தாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
லியோ படத்தின் சூட்டிங்கிற்காக பல விஷயங்களை விஜய் செய்ததாகவும், 9 மணி சூட்டிங் என்றால் அவர் காலை 7 மணிக்கே செட்டிற்கு வந்துவிடுவார் என்றும் அந்த அளவிற்கு அவர் டெடிகேஷனுடன் செயல்பட்டதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார். தான் லியோ படத்தில் சுதந்திரமாக செயல்பட விஜய் காரணமாக அமைந்ததாகவும் லோகேஷ் கூறியுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு அவரை தான் அண்ணா என்றே அழைத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே தொடர்ந்து 20 ஆண்டுகளெல்லம் தான் சினிமாவில் இருக்க மாட்டேன் என்றும் அடுத்த 10 ஆண்டுகள், 10 படங்களில் வேலை செய்துவிட்டு, தான் சினிமாவிலிருந்து விலகிவிடுவேன் என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார். சும்மா சினிமாவில் முயற்சித்து பார்க்கலாம் என்றுதான் தான் வந்ததாகவும் தன்னுடைய LCU கான்செப்டில் சிறப்பான நம்பிக்கை வைத்து தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.