கதை புகார்களை முறியடித்த தண்டட்டி இயக்குனர்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி'. அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். இதில் கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் கதை நான் தயாரித்த 'அண்டாவ காணோம்' என்ற படத்தின் கதையை போல் உள்ளது. எனவே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் கூறி வந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு படம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அவரும் இரண்டும் வெவ்வேறு கதை என்று கூறிவிட்டார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராம் சங்கையா கூறியதாவது: நான் சிம்புதேவன் உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளேன். இது எனது முதல் படம். என்னுடைய முதல் பதிவே அழுத்தமாக இருக்க வேண்டுமென இந்த கதையைத் தேர்வு செய்தேன். இப்போது கிராமப்புறங்களில் தண்டட்டி அணிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எதிர்காலத்தில் அது முழுவதுமாக இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இனி வர இருக்கின்ற தலைமுறைக்கு தண்டட்டி என்ற ஒரு சொல் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இதை எனது முதல் படைப்பாக எடுத்துக் கொண்டேன்.

கிராமத்தில் தண்டட்டி அணிந்த பெண்மணியான ரோகிணி எப்படி வாழ்ந்தார் அவர் இறந்த பிறகு அந்த தண்டட்டி தொலைந்து விடுகிறது அதை கண்டுபிடிப்பதற்காக அந்த ஊர் காவல் நிலைய ஹெட் கான்ஸ்டபிள் ஆன பசுபதி வருகிறார். அந்த தண்டட்டி என்ன ஆனது? யார் எடுத்தது? என்பதை மதுரை மாவட்ட வட்டார வழக்கில் நகைச்சுவை உணர்வுடன் சொல்லியுள்ளேன்.

படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. நடிகர் நடிகைகள் என பத்து பேரைத் தவிர மற்ற அனைவருமே அந்த ஊரைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த பாட்டிகள். அவர்களை நடிக்க வைத்தது சிறப்பாக இருந்தது. இந்த கதைக்கு ரோகிணி பொருத்தமாக இருப்பார் என முன்பே முடிவு செய்து விட்டேன். அதேபோல் போலீஸ் கதாபாத்திரத்திற்கும் பசுபதி பொருத்தமாக இருந்தார். விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி மிகுந்த ஒத்துழைப்புடன் இந்தப் படத்தை எடுத்துக் கொடுத்தார். அதேபோல் ஒரு கிராமத்துப் படம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இசையமைக்காமல் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி இசையமைத்துக் கொடுத்தார்.

அதேபோல் சமீபத்தில் 'அண்டாவ காணோம்' படத்தின் கதையும் இந்த கதையும் ஒரே மாதிரி இருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் புகார் தெரிவித்தார். நாங்கள் அவருக்கு படத்தைப் போட்டுக் காண்பித்தோம். படத்தைப் பார்த்துவிட்டு அவர் எங்களிடம் என் படம் வேறு. உங்கள் படம் வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அதேபோல் திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் இது என்னுடைய புத்தகத்திலுள்ள சிறுகதை எனக் குற்றம் சாட்டியிருந்தார். அவர் கடந்த ஆண்டு தான் அந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டார். ஆனால் என்னுடைய தண்டட்டி படத்தின் கதையை 2019ம் ஆண்டே பதிவு செய்து விட்டேன். 7 ஆண்டுகளாக இந்தக் கதையை தமிழ்சினிமாவிலுள்ள பலருக்கு சொல்லிவந்திருக்கிறேன்.
இதுபோல் குற்றச்சாட்டுகள் வருவதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. 7 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு இந்த படம் வெளியாக உள்ளது. இந்த கன்டென்ட் பிடித்ததால்தான் தயாரிப்பாளர் லக்ஷ்மண் இந்த படத்தைத் தயாரித்தார். படம் சென்சார் செய்யப்பட்டு யூ சான்றிழ் பெற்றுள்ளது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.