கீதை பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது: காங்கிரஸ் – பாஜக இடையே வெடித்த வார்த்தைப் போர்!

புதுடெல்லி: மத்திய அரசின் காந்தி அமைதி விருதுக்கு கோரக்பூர் கீதா (Gita) பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்துக்காக காந்திய வழிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு கடந்த 1995-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் காந்தி அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசியம், இனம், மொழி, சாதி, மதம், பாலினம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு வழங்கப்படும் காந்தி அமைதி விருதை வென்றவர்களுக்கு ரூ.1 கோடி, பாராட்டுச் சான்றிதழ், நேர்த்தியான பாரம்பரிய கைவினைப் பொருள் அல்லது கைத்தறிப் பொருள் ஆகியவை வழங்கப்படும்.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் இயங்கி வரும் இந்தியாவின் முன்னணி பதிப்பகமான கீதா பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு ஒருமனதாக இதனை தேர்வு செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த தேர்வுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சாவர்க்கருக்கும் கோட்சேவுக்கும் அளிப்பதைப் போன்றது இது என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நூற்றாண்டு கொண்டாட்டத்தில் உள்ள கீதா பதிப்பகம் காந்தி அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிப்பகம் குறித்து அக்‌ஷயா முகுல் எழுதிய புத்தகத்தில், மகாத்மா காந்தியுடன் கீதா பதிப்பகத்துக்கு இருந்த புயல் போன்ற உறவு குறித்தும், அரசியல், மதம், சமூகம் சார்ந்த விவகாரங்களில் காந்தியோடு அந்த பதிப்பகம் எவ்வாறு போரிட்டது என்பது குறித்தும் வெளிப்படுத்தி இருக்கிறார். காந்தி அமைதி விருதுக்கு கீதா பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உண்மையில் ஒரு கேலிக்கூத்து. இது சாவர்க்கருக்கும் கோட்சேவுக்கும் விருது கொடுப்பதைப் போன்றது” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, “கீதா பதிப்பகம் சமூக, கலாச்சார முன்னேற்றத்துக்கு அளித்த பங்களிப்புதான் என்ன? அவர்கள் நல்ல பணியை செய்தார்கள். ஆனால், அமைதியை ஏற்படுத்துவதில் அவர்கள் என்ன பங்களிப்பை செய்தார்கள்? விருதை தேர்வு செய்வதில் கவனிக்கப்பட வேண்டிய காரணிகள் இருக்கின்றன. கீதா பதிப்பகத்தை ஊக்குவிக்க விரும்பினால் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க முடியும். ஆனால், அதனை காந்தியின் பெயரோடு தொடர்புபடுத்தக் கூடாது” என தெரிவித்திருந்தார்.

ஜெய்ராம் ரமேஷின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, “கீதா பதிப்பகத்தை நிறுவிய ஹனுமன் பிரசாத் போத்தார், ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட புரட்சியாளர். அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என பரிந்துரைத்தவர் கோவிந்த் வல்லப் பந்த். கீதா பதிப்பகத்தின் முதல் இதழான கல்யாண், கோயில்களில் தலித்துகள் நுழைவதற்காகப் போராடியது. மக்கள் தங்களின் நம்பிக்கையையும் பெருமதித்தையும் தக்க வைத்துக்கொள்ள மலிவு விலையில் புத்தகங்களை வெளியிட்டது.

காங்கிரஸ் தனது எதிர்ப்பின் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்காகன முக்கிய மதிப்பீடுகளுக்கு எதிராக நிற்கிறது. கீதா பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டை ஆங்கிலேய அரசு தேச துரோகம் என கருதியது. இந்துக்களின் இத்தகைய வெளிப்பாடுகளை, நவீன இந்தியாவில் பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் எதிர்க்கின்றன. இதில், காங்கிரஸ் எந்த பக்கம்? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், எப்போதும் பகவத் கீதையை தன்னோடு வைத்திருந்தார் என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “மாவோயிச சிந்தனை உள்ளவர்களைக் கொண்ட கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. அந்த கட்சியிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது. முத்தலாக் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. கீதா பதிப்பகம் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் கருத்து வெட்ககரமானது. நாங்கள் இதனைக் கண்டிக்கிறோம். மாவோயிச சிந்தனை கொண்டவர்களைக் கொண்ட அக்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அவர்கள்தான் ராகுல் காந்திக்கு ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.