சென்னை சௌகார்பேட்டை பெரிய நெய்க்காரன் தெருவில் வசித்து வருபவர் யோகேஷ். இவர் வீட்டின் இரண்டாவது மாடியில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், 3.6.2023-ம் தேதி தன்னுடைய நகைக்கடையில் தங்க நகைகள் மற்றும் பணத்தை யோகேஷ் சரிபார்த்தார். அப்போது ஒரு கிலோ தங்கக் கட்டிகள், 15 லட்சம் ரூபாய் மாயமாகியிருந்தது. இது குறித்து யோகேஷ் யானை கவுனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில் யோகேஷின் தம்பி வினோத் மீது போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்தது. அதனால் அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து யானைகவுனி போலீஸார் நம்மிடம் பேசுகையில், “தங்க நகைக்கடை நடத்தி வரும் யோகேஷ் என்பவர் கொடுத்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்தியபோது, அவரின் கடையிலிருக்கும் சிசிடிவி-யில் வெளிநபர்கள் யாரும் வந்து செல்லவில்லை எனத் தெரியவந்தது. அதனால் கடை ஊழியர்களிடம் முதலில் விசாரித்தோம்.
சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது யோகேஷின் தம்பி வினோத் என்பவர், சில நேரங்களில் தனியாக நகைக்கடைக்கு வந்து செல்வது தெரியவந்தது. அதனால் அவர்மீதான சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது, வினோத்தான் தங்கக்கட்டிகள், பணத்தைத் திருடியது தெரியவந்தது. இவர், தன்னுடைய அம்மாவிடம் நகைக்கடையின் சாவியை வாங்கி, அண்ணனுக்குத் தெரியாமல் நகைகள், பணத்தைத் திருடியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கடையில் யாரும் இல்லாத நேரத்தில் லாக்கரைத் திறந்து, அதிலிருந்து தங்கக்கட்டிகள், பணத்தைத் திருடிய வினோத், அதன்மூலம் ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருக்கிறார். இதையடுத்து அவரிடமிருந்து ஒரு கிலோ தங்கக்கட்டிகள், 1,50,000 ரூபாயைப் பறிமுதல் செய்திருக்கிறோம். கைதுசெய்யப்பட்ட வினோத், பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் வசித்து வருகிறார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.