பாகிஸ்தான் அணிக்கு இன்னொரு அப்செட்.! கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ

ஆசியக் கோப்பையை நடத்துவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த போட்டி ஹைபிரிட் மாதிரியின் கீழ் விளையாடப்படும். அதாவது, நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் மட்டுமே விளையாடும்.  இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சில மாற்றங்களை செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக் கொண்டது. அது தொடர்பான ஒரு அப்டேட் இப்போது வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தான் அணியின் கோரிக்கை

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான வரைவு அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே ஐசிசியிடம் ஒப்படைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அதில் சில மாற்றங்களை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.  இதனால் உலகக் கோப்பை போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதுஎன்னவென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகள் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. உத்தேச அட்டவணையின்படி, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட வேண்டும், அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது. 

பிசிசிஐ நிராகரித்தது

பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெறும் போட்டியை சென்னைக்கு மாற்ற பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. அதேபோல், சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த போட்டியை பெங்களூருக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கவில்லை. உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடம் தொடர்பாக எந்த மாற்றத்தையும் பிசிசிஐ பரிசீலிக்காது என தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் விளையாட வேண்டும்.

பாகிஸ்தான் கோரிக்கைக்கான பின்னணி

சென்னையின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எப்பொழுதும் உதவியாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் மற்றும் நூர் அகமது போன்ற இரண்டு ஆபத்தான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்டத்தின் திருப்புமுனையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த இரு பந்து வீச்சாளர்களும் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023ல் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும், பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தின் பேட்டிங் நட்பு ஆடுகளத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட PAK அணி ஏன் விரும்பவில்லை என்பது தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.