சென்னை: இந்தியாவில் டிஜிட்டல் சாதன பயனர்களில் பெரும்பாலானோர் தங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட் உட்பட அனைத்து சாதனங்களுக்கும் ஒரே வகையிலான சார்ஜர் கேபிள் வேண்டும் என விரும்புவதாக சர்வே மூலம் தெரியவந்துள்ளது. 10-ல் 9 இந்தியர்கள் ஒரே வகையிலான சார்ஜர் கேபிள் வேண்டும் என இதில் தெரிவித்துள்ளனர்.
இந்திய நாட்டில் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் டைப்-சி சார்ஜிங் போர்ட் அவசியம் இருக்க வேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. உற்பத்தியாளர்கள் இதனை உறுதி செய்வதற்கான காலக்கெடு வரும் மார்ச், 2025 வரை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மின் கழிவுகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது நடைமுறை வந்தால் ஒரே சார்ஜர் கேபிள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ எனும் நிறுவனம் மேற்கொண்ட சர்வே ஒன்றில் இது தொடர்பாக விவரங்கள் கோரப்பட்டுள்ளன. சுமார் 23,000 பேரிடம் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான மக்கள், வெவ்வேறு வகையிலான சார்ஜர் கேபிள் மூலம் நிறுவனங்கள் அக்சஸரிஸ் விற்பனையை மேற்கொள்ள விரும்புவதால் இப்படி செய்யப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில் சுமார் 78 சதவீதம் பேர் அனைத்து நிறுவன போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜர் கேபிள் வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் 38 சதவீதம் பேர் அரசு இந்த விவகாரத்தில் முறைப்படுத்தாமல் போனதே காரணம் என தெரிவித்துள்ளனர்.