தென்காசி : கல்குவாரியில் அத்துமீறி நுழைந்ததாக சீமான் உள்பட 75 பேர் மீது வழக்கு பதிவு.!
தேர்தல் பரப்புரை பயணத்தின் ஒரு அங்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் படி அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் அவர் சங்கரன்கோவில் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சீமானிடம், சங்கரன்கோவில் பகுதியில் கல் குவாரிகளின் பெயரில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இதைக்கேட்ட சீமான், தன் கட்சியினரோடு அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதைப்பார்த்த அந்தக் கல்குவாரி ஊழியரான சண்முகசாமி என்பவர் சீமானும், அவரது கட்சியினரும் குவாரிக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், அங்கு இருந்த ஊழியர் ஒருவரையும் தாக்கியதாகப் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் இன்று சங்கரன்கோவில் போலீஸார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.