புவனேஷ்வர்,
மாநிலங்களுக்கு இடையிலான 62-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் கடந்த 5 நாட்களாக நடந்தது.
கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை ஆர்.வித்யா (56.01 வினாடி) தங்கப்பதக்கமும், கர்நாடகாவின் சின்சால் கவீரம்மா (56.76 வினாடி) வெள்ளிப்பதக்கமும், கேரளாவின் அனு (58.13 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். ‘டாப்-2’ இடங்களை பிடித்த வித்யா, சின்சால் கவீரம்மா ஆகியோர் சீனாவில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு (57.48 வினாடி இலக்கு) தகுதி பெற்றனர்.
ஈட்டி எறிதலில் உத்தரபிரதேச வீராங்கனை அன்னு ராணி (58.22 மீட்டர்) தங்கப்பதக்கத்துடன் ஆசிய போட்டிக்கான தகுதி இலக்கையும் (56.46 மீட்டர்) எட்டிப்பிடித்தார். 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை ஸ்ரபானி நந்தா (23.77 வினாடி) தங்கமங்கையாக ஜொலித்தார். 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தனுஷா, சுபா, பேபி, வித்யா ஆகியோர் அடங்கிய தமிழக அணி 3 நிமிடம் 37.87 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டது. பஞ்சாப் அணி (3 நிமிடம் 39.22 வினாடி) வெள்ளிப்பதக்கமும், டெல்லி அணி (3 நிமிடம் 39.51 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றது.
சிவா தங்கம் வென்றார்
ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கர்நாடக வீரர் யாஷாஸ் (49.37 வினாடி), தமிழக வீரர் சந்தோஷ்குமார் (49.52 வினாடி) முறையே முதல் 2 இடங்களை பிடித்ததுடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி இலக்கையும் (49.75 வினாடி) அடைந்தனர்.
200 மீட்டர் ஓட்டத்தில் அசாம் வீரர் அம்லான் போர்கோஹைன் (20.71 வினாடி) தங்கப்பதக்கம் வென்றதுடன் ஆசிய விளையாட்டுக்கும் தகுதி பெற்றார். ‘போல்வால்ட்’ (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் தமிழக வீரர் எஸ்.சிவா 5.11 மீட்டர் உயரம் தாண்டி, தங்கப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார்.
குண்டு எறிதலில் பஞ்சாப் வீரர் தஜிந்தர் பால்சிங் 21.77 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அவர் ஆசிய விளையாட்டு மற்றும் உலக தடகள போட்டிக்கும் தகுதி பெற்றார்.
4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆரோக்ய ராஜீவ், சந்தோஷ் குமார், சதீஷ், அருள் ஆகியோர் அடங்கிய தமிழக அணி 3 நிமிடம் 06.75 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கேரளா (3 நிமிடம் 06.87 வினாடி) 2-வது இடமும், அரியானா (3 நிமிடம் 08.13 வினாடி) 3-வது இடமும் பெற்றன.
தமிழக அணி ‘சாம்பியன்’
கடைசி நாளில் 4 தங்கப்பதக்கம் மகசூல் செய்து கவனத்தை ஈர்த்த தமிழக அணி (127.333 புள்ளிகள்) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது. உத்தரபிரதேச அணி (118.333 புள்ளி) 2-வது இடத்தை பிடித்தது. ஆண்கள் பிரிவில் தமிழகம் முதலிடமும், பெண்கள் பிரிவில் உத்தபிரதேசமும் முதலிடமும் பெற்றன.