சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
திமுக தலைமைக் கழக பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக ஆளுநரின் தாய் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசினார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
நடிகை குஷ்பு
இந்நிலையில் நடிகை குஷ்பு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆவேசமாக பேசிய நடிகை குஷ்பு, பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றார். மேலும் கருணாநிதி இருந்தபோது திமுக இப்படி இல்லை என்றும் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சாடினார்.
முட்டிக்கு முட்டி தட்டணும்
பெண்களை அசிங்கமாக பேசுவதையும் சிலர் ரசித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் இதை சொல்வதால் தனது வீட்டின் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினாலும் தனக்கு கவலை இல்லை என்றார். பெண்கள் குறித்து தவறாக பேசும் இதுபோன்ற ஆட்களை முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்று பேசுபவர்களுக்கு புத்தி வரும் என்றும் விளாசினார் குஷ்பு.
தீனிப்போட்டு வளர்க்கிறார்கள்
திமுகவில் இதுபோன்ற ஆட்களைதான் தீனி போட்டு வளர்க்கிறார்கள் என்றும், இதுபோன்ற செயல்கள் சரியா? இதுதான் திராவிட மாடலா என சரமாரியாக சாடினார் நடிகை குஷ்பு. மேலும் தன்னை சீண்ட வேண்டாம், சீண்டினால் தாங்க மாட்டீர்கள் என்றும் நடிகை குஷ்பு கூறினார். ஒரு கட்டத்தில் கண்கள் கலங்கினார் குஷ்பு. இதனை தொடர்ந்து நேற்று மாலை திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
குஷ்பு பதிலடி
தொடர்ந்து ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நடிகை குஷ்புவை திமுகவினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
திராவிட முட்டாள்களே
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ஐயோ திராவிட முட்டாள்களே! உங்களையும், கட்சியைக் கட்டியெழுப்ப தன் உயிரைக் கொடுத்த மாபெரும் தலைவர் டாக்டர் கலைஞர்க அவர்களையும் கேலி செய்வதை நிறுத்துங்கள். நீங்கள் பழிவாங்கும் எண்ணமும் வெறுப்பும் கொண்டவர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் உங்கள் கட்சியில் இருந்தபோதும் நடிகையாக இருந்தேன்.
உங்களைப் போல் பிச்சை இல்லை
அதனால் என்னை நடிகை என்று கூறி ட்ரோல் செய்ய முயல்வது என் காதில் விழுந்தது. உங்களை விட பலமான தோள்கள் என்னிடம் உள்ளன, அவை சுயமாக உருவானவை. உங்கள் மீது எறியப்படும் பிச்சையால் உங்களை போல் செழித்து வளர்த்தவை அல்ல. உங்கள் பெயரை என்னுடைய பெயருடன் இணைத்தால் மட்டுமே உங்களால் செய்தியாக முடியும். உங்கள் அவலநிலை எனக்குப் புரிகிறது. ஆனால் நம் முதல்வர், உங்கள் தலைவரும் ஒரு நடிகர் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதில் அவர் தோல்வியுற்றவர் என்பது பரிதாபம் என பதிவிட்டுள்ளார்.