சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) இயக்குநர் கௌதம் மேனனுக்கு லோகேஷ் கனகராஜ்தான் சிகரெட் அடிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார் என தெரியவந்திருக்கிறது.
வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் களம் என்ற குறும்படத்தை இயக்கினார். அது கொடுத்த நம்பிக்கையின் காரணமாக தனது வேலையை உதறிவிட்டு முழு மூச்சாக சினிமாவில் இறங்கினார். அப்படி அவர் முதல் படமாக மாநகரம் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட் இல்லையென்றாலும் டீசன்ட்டான வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அவரது மேக்கிங்கில் அனுபவம் வாய்ந்த இயக்குநர் எட்டிப்பார்த்தார்.
கைதியால் சிக்கிய லோகேஷ்: மாநகரம் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை இயக்கினார். அந்தக் கதையை முதலில் மன்சூர் அலிகானுக்கு அவர் எழுதியதன் மூலமே அவர் தனது கதையின் மேல் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால் கைதி கதையை கேட்ட தயாரிப்பு நிறுவனம் பெரிய ஸ்டாரிடம் போகலாம் என கூற அதன் பிறகே கார்த்தி படத்துக்குள் வந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. இதனால் அவர் முன்னணி ஹீரோக்களின் பார்வையில் சிக்கினார்.
விஜய்யுடன் லோகேஷ்: முதல் இரண்டு படங்களும் ஹிட் கொடுத்த பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்தார்அதுவரை விஜய்யை யாரும் காண்பிக்காத வகையில் காண்பித்து படத்தின் வெற்றியை அறுவடை செய்தார் லோகேஷ். அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது, ஹீரோவின் பெயரை விரிவாக கூறாதது என மேக்கிங்கில் வித்தியாசத்தை காண்பித்திருந்தார் அவர். இதே ஸ்டைலை மாநகரம் படத்திலும் அவர் கடைப்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மெகா ப்ளாக் பஸ்டர் விக்ரம்: மூன்று படங்கள் வெற்றியை அடுத்து கமல் ஹாசனுடன் விக்ரம் படத்தில் இணைந்தார். கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்பதை அவரே பல மேடைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். வெறும் பேச்சோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தான் கமல் ஹாசனின் எவ்வளவு வெறித்தனமான ரசிகன் என்பதை விக்ரம் மேக்கிங்கில் காண்பித்தார் அவர். குறிப்பாக லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸை உருவாக்கி அதகளம் செய்தார். படம் 500 கோடி ரூபாயை வசூலித்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
நட்சத்திர பட்டாளம்: அவர் இப்போது லியோ படத்தை இயக்கிவருகிறார். படத்தில் கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மாத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் கௌதம் மேனனுக்கு சிகரெட் அடிக்க லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொடுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
தம் அடிக்க கற்றுக்கொடுத்த லோகேஷ்: அதாவது லியோ படத்தில் நடிக்கும் கௌதம் மேனனுக்கு சிகரெட் அடிக்கும் காட்சிகள் இருக்கின்றனவாம். ஆனால் கௌதம் மேனனுக்கோ சிகரெட் அடிக்க தெரியாதாம். இதை ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷிடம் சொல்லியும்விட்டாராம் அவர். உடனே லோகேஷ் கௌதம் மேனனிடம் எப்படி சிகரெட் அடிக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த கௌதமோ எப்படி இவ்வளவு பெர்ஃபக்ட்டா அடிக்கிற என்று கேட்டாராம். அதற்கு லோகேஷ் கனகராஜ், எல்லாம் உங்கள் காக்க காக்க போன்ற படங்களை பார்த்து கற்றுக்கொண்டதுதான் என கூறினாராம்.
புரிதல் எப்படி உருவானது: அதேபோல் கோவிட் சமயத்தில் கௌதம் மேனன் உள்ளிட்ட முக்கியமான சீனியர் இயக்குநர்கள் எல்லோரும் ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த க்ரூப்பில் தற்கால தலைமுறையிலிருந்து லோகேஷும், கார்த்திக் சுப்புராஜும் மட்டும்தான் இருந்திருக்கிறார்கள். எனவே அப்போதிருந்தே கௌதம் மேனனிடம் ஒரு நல்ல புரிதல் உருவாகிவிட்டதாம்.அது லியோ ஷூட்டிங்கில் நிறையவே உதவியதாம். இந்தத் தகவலை லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.