“மோடியின் புதிய அடிமை ஏக்நாத் ஷிண்டே” – சிவசேனா தொடக்க நாளில் கொதித்த உத்தவ் தாக்கரே

சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு முதல் முறையாக கட்சி தொடங்கப்பட்ட தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மும்பை கோரேகாவிலும், உத்தவ் தாக்கரே தரப்பில் கிங் சர்க்கிளிலும் கொண்டாடப்பட்டது. இதில் உத்தவ் தாக்கரே பேசுகையில், “முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அடிமை. மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் அங்கு செல்லாமல் அமெரிக்கா செல்வதாக குறிப்பிட்டேன். உடனே புதிய அடிமைக்கு கோபம் வந்துவிட்டது. சூரியனை பார்த்து துப்பாதீர்கள் என்று சொல்கிறார். யார் சூரியன். எந்த மாதிரியான சூரியன். உங்களது கணக்குப்படி உங்களது குரு(மோடி) சூரியன் என்றால் மணிப்பூரில் ஏன் உதிக்கவில்லை. சிரியா, லிபியாவை விட மணிப்பூர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மணிப்பூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாளை(இன்று) துரோகிகள் தினம். துரோகிகளின் துரோகத்திற்கு ஓராண்டு. செவ்வாய் கிழமை உலக துரோகிகள் தினம். இன்றைக்கும் சிலர் அவர்கள்(ஷிண்டே) அணிக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். போகின்றவர்கள் போகட்டும். இதனால் சிவசேனா அதிர்ச்சியடையாது. இன்னும் கூலிப்படையினர் யாரையாவது விட்டுச்சென்று இருந்தால் அவர்களையும் அழைத்துக்கொள்ளுங்கள். பட்டியலை அனுப்புங்கள். நானே அனுப்பி வைக்கிறேன். இந்த ஒரு ஆண்டில் எங்கள் பேப்பரை திருடி என் தந்தையையும் திருட முயற்சித்தார்கள்.

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்ததாக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார். மோடி தடுப்பூசியை கண்டுபிடித்திருந்தால், மற்ற விஞ்ஞானிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். இது போன்ற கண்மூடித்தனமான பக்தர்களுக்கும், அவர்களின் குருவிற்கும் தடுப்பூசி போடப்படவேண்டும்.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, இஸ்லாம் மதத்திற்கு அச்சுறுத்தல் என்று சொன்னார்கள். இப்போது பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. ஆனால் இந்துக்களுக்கு ஆபத்து என்று சொல்கிறார்கள். நீங்கள் பதவியில் இருக்கும் போது இந்துக்களுக்கு ஆபத்து என்றால், நீங்கள் ஆட்சி நடத்த தகுதியில்லாதவர்கள் என்றுதான் அர்த்தம். காஷ்மீரில் இந்துக்கள் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்களது அரசியல் எதிரிகளை சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறையை பயன்படுத்தி அழிக்கிறீர்கள்” என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரேயுடன் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே இது குறித்து பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நாங்கள் 20-ம் தேதியை புரட்சி தினமாக கொண்டாடி பதிலடி கொடுப்போம். முதல்வராக இருந்து கடந்த இரண்டரை ஆண்டில் உத்தவ் தாக்கரே எத்தனை கையெழுத்து போட்டார் என்று தெரியுமா? நான் அதைவிட அதிக கையெழுத்து போட்டுள்ளேன். என்னிடம் வரும் ஃபைல்களை ஒரே நாளில் கையெழுத்து போட்டுள்ளேன். காரில் போகும்போது கூட பைல்களில் கையெழுத்து போடுகிறேன். ஆனால் முந்தைய முதல்வரிடம் பேனா கூட இல்லை.

ஆனால் என்னிடம் இரண்டு பேனா இருக்கிறது. பிரதமர் மணிப்பூர் செல்வது ஒன்றும் பெரிய பிரச்னை கிடையாது. அவர் பாகிஸ்தான் மீதே தாக்குதல் நடத்தியவர். கொஞ்சம் மரியாதை கொடுங்கள். நான் முதல்வரான பிறகு என்னிடம் எதாவது மாற்றம் தெரிகிறதா. ஆனால் தாக்கரே எப்படி தொண்டர்களை உதாசீனப்படுத்தினார்? பாலாசாஹேப் தாக்கரே ஒரு போதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டதில்லை” என்று தெரிவித்தார். கட்சி தொடங்கப்பட்ட தினத்தை ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறும் கூட்டமாக இதனை இரு தரப்பினரும் பயன்படுத்தி கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.