முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், வரும் ஜூலை 8-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், கடந்த சில நாள்களாகவே ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். அதேபோல் பா.ஜ.க வேட்பாளரின் உறவினர் ஒருவர் குத்திக் கொலைசெய்யப்பட்டார்.
இத்தகைய வன்முறை காரணமாக கொல்கத்தா உயர் நீதிமன்றம், தேர்தல் பாதுகாப்பு பணிகளில் மத்திய ரிசர்வ் படையினரை ஈடுபடுத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதோடு, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வன்முறை பாதித்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், வன்முறை தொடர்பாக மக்கள் புகாரளிக்கும் வகையில் `அமைதி அறை’ என்ற பெயரில் கட்டுப்பாட்டு அறையை (Control Room) உருவாக்கினார்.
இந்த நிலையில் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அமைத்த அமைதி அறைக்கு உடல் ரீதியிலான தாக்குதல், அரசியல் மிரட்டல் என நூற்றுக்கணக்கான புகார்கள் வந்திருப்பதாக அதிகாரியொருவர் நேற்று முன்தினம் தெரிவித்திருக்கிறார். அந்த புகார்களில், பா.ஜ.க எம்.பி ராஜு பிஸ்தா, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்துப் பேசிய அந்த அதிகாரி, “பா.ஜ.க எம்பி ராஜு பிஸ்தா புகார் பற்றி, ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் உடனடியாக மாநில தேர்தல் ஆணையர், தலைமைச் செயலரிடம் எடுத்துரைத்தார். பின்னர் இந்தப் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு டார்ஜிலிங் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறினார்.