அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் செந்தில் பாலாஜிக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து புழல் சிறை நிர்வாகத்தால் விசாரணைக் கைதி எண்ணும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் ஓமந்தூரார் மருத்துவமனையில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏற்கனவே செந்தில் பாலாஜியின் இதயத்தில் ஏற்பட்ட அடைப்புக்கான பிளட் தின்னர் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டதால், உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை என்றார். மீறியும் செய்தால் இதயத்தில் ரத்தக்கசிவு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் 5 நாட்கள் செந்தில் பாலாஜி கண்காணிப்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கான தகுதியை பெற்றுவிட்டதாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும், இதனால் நாளை அதிகாலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சைக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் பிரச்சனை இல்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். செந்தில் பாலாஜி தனது இதயத்தில்
கிரிட்டிக்கல் பிளாக்ஸ் இருப்பது தெரியாமல் இதுவரை இருந்துள்ளார் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் செகண்ட் ஒபினியனுக்காக அப்பல்லோ மருத்துவரை அணுகியதாகவும், அவரும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்தார் என்றும் நாளை காலை அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.