அட்லாண்டிக்: நூறு வருடங்களுக்கு முன்னர் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகத்தை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகி இருக்கிறது.
21 அடி கொண்ட நீர் மூழ்கி கப்பல் ஒன்று 5 சுற்றுலா பயணிகளுடன் (பயணத்தில் பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ஒருவரும் இருந்துள்ளார்) ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டிக் கடலில் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட 2 மணி நேரத்திற்கு நீர் மூழ்கி கப்பல் தனது சிக்னலை இழந்துள்ளது. நீர் முழ்கி கப்பலில் பயணித்த பயணிகளின் நிலைமை திங்கட்கிழமைவரை தெரியவில்லை. மாயமானவர்களை மீட்கும் பணியில் கனடா – அமெரிக்கா கடற்படைகள் இறங்கி உள்ளன.
மீட்புப் பணிகள் குறித்து அமெரிக்க கடற்படை கூறும்போது, “அந்த தொலைதூரப் பகுதியில் தேடுதல் நடத்துவது சவாலானது. அவர்களை கண்டுபிடிக்க அனைத்து தொழில் நுட்பங்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர்களது கப்பலில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பதாக நம்பப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் 1985 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து அந்த கப்பல் விரிவாக ஆராயப்பட்டது. சமீபத்தில் கூட அதன் முப்பரிமாண வடிவம் வெளியிடப்பட்டது.
டைட்டானிக் கப்பலுக்கு என்ன ஆனது…. 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்று கொண்டிருந்தபோது ஏப்ரல் 14 ஆம் தேதி பனிப்பாறையில் மோதியதாக நம்பப்படுகிறது. இந்த விபத்தில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர். வரலாற்றின் மோசமான கடல் விபத்தாக இது அறியப்படுகிறது.