ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையாகி உள்ளார். ராம் சரணுக்கும் உபாசனாவுக்கும் திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது குழந்தை பிறந்திருக்கிறது.
ராம் சரணின் மனைவி உபாசனா திருமணம் ஆன போதே தனது கருமுட்டையை ஃப்ரீஸ் செய்து பாதுகாத்து வைத்தது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
திருமணமான 3 நாட்களிலேயே தான் கர்ப்பமாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்ததாகவும், தங்களுக்கு எப்போது குழந்தை வேண்டும் என்பதை தம்பதியினர் இருவரும் தான் பேசி முடிவு செய்ய வேண்டும் என்று அந்த பேட்டியில் உபாசனா கூறியிருந்ததையும் அவர் ஏன் இதை செய்தார் என்பது குறித்தும் விரிவாக இங்கே பார்க்கலாம்.
ராம் சரணுக்கு பெண் குழந்தை: 2007ம் ஆண்டு சிறுத்த திரைப்படத்தின் மூலம் ஹீரோவான ராம்சரண் 2009ம் ஆண்டு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தில் நடித்தே இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்து மாஸ் காட்டிய ராம் சரண் கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து சர்வதேச ஹீரோவாக உயர்ந்து விட்டார். இந்நிலையில், அவருக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
கருமுட்டையை பாதுகாத்த மனைவி: அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் 20 வயதாகும் பெண்கள் தங்கள் கருமுட்டையை இன்சூரன்ஸ் செய்து வைப்பது போல ஃப்ரீஸ் செய்து பாதுகாத்து வைத்து வருகின்றனர் என்பதை பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிந்து வைத்திருந்த உபாசனா சினிமாவில் ராம் சரணும் தனது துறையில் தானும் சாதித்த பின்னர் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.
இதை தனது கணவர் ராம் சரண் உடன் கலந்து ஆலோசித்த நிலையில், மனைவியின் கருத்தை மதித்து கருமுட்டையை பாதுகாத்து வைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
கருமுட்டையை பாதுகாத்தது ஏன்: இளம் பெண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் கருமுட்டையை பாதுகாத்து ஃப்ரீஸ் செய்து வைத்துக் கொண்டால், உரிய நேரத்தில் அதை வைத்து தேவைப்படும் போது குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கால தாமதமாக திருமணம் செய்துக் கொள்வது, மற்றும் வேலையை குழந்தை பிறப்பிற்காக விட்டு விடும் நிலை எல்லாம் ஏற்படாது என்றும் இது வெளிநாடுகளில் அதிகளவில் நடைமுறையில் உள்ளதாகவும், இந்தியாவிலும் இதை அமல்படுத்த வேண்டும் என்கிற முனைப்பிலேயே ராம் சரணின் மனைவி மருத்துவர்களின் ஆலோசனைகளுடன் இந்த முறையை மேற்கொண்டுள்ளார் எனக் கூறுகின்றனர்.
குழந்தையை வளர்க்க ரெடி: நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா இருவருமே லைஃப்பில் தற்போது செட்டில் ஆகி விட்டதாகவும் இனிமேல் குழந்தையை வளர்க்க ரெடியான மன நிலைக்கு வந்த நிலையில், தான் கடந்த ஆண்டு உபாசனா கர்ப்பம் அடைந்துள்ளார்.
உபாசனாவின் முடிவுக்கு ராம் சரண் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் கொடுத்த ஒத்துழைப்புத் தான் இதை சாதிக்க முடிந்தது என்கின்றனர். இந்நிலையில், தற்போது பெண் குழந்தை பெற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களும் ராம் சரணுக்கும் உபாசனாவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.