கண்ணூர்: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஆயுதங்களுடன் நடமாடிய மாவோயிஸ்டுகள் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து கர்நாடகா வனப்பகுதிக்குள் ஓடி மறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது மாவோயிஸ்டுகள் வீசி சென்ற துண்டு பிரசுரங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் ஜனநாயக ஆட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஆயுதப் புரட்சி மூலம் புதிய அரசாங்கத்தை அமைப்பதை இலக்காக கொண்டிருப்பதாக கூறிக் கொள்கின்றனர். தங்களது கொள்கையை நிறைவேற்ற நாட்டின் பல மாவட்டங்களில் ஆயுதம் தாங்கியவர்களாக வனப்பகுதிகளில் பதுங்கி இருந்து பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் மாவோயிஸ்டுகள். வனப்பகுதிகளில் பழங்குடி மக்களை கேடயமாகவும் மாவோயிஸ்டுகள் பயன்படுத்துகின்றனர் என்பதும் குற்றச்சாட்டு.
கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் பெருமளவு, பாதுகாப்பு படையினரால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் ஒடிஷா, பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மாவோயிஸ்டுகள் நடமாடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் Edappuzha உள்ளிட்ட சில பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடிய மாவோயிஸ்டுகள் மளிகை பொருட்களை உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு அப்பகுதிகளில் அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வீசி சென்றிருக்கின்றனர்.
மேலும் தங்களை பொதுமக்கள் பின் தொடரக் கூடாது என துப்பாக்கி முனையில் எச்சரித்துவிட்டு 8 கி.மீ தொலைவில் இருக்கும் கர்நாடகா வனப்பகுதிக்குள் ஓடி சென்று பதுங்கி இருக்கின்றனர்.
இத்தகவல் கிடைத்ததும் போலீசார் மாவோயிஸ்டுகள் நடமாடிய பகுதிகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.