ஹவாலா
பணம்… இந்த பெயரை கேட்டாலே சட்ட விரோதமாக ஏதோ நடந்திருக்கிறது எனச் சொல்லி விடலாம். ஹவாலா பணிப் பரிவர்த்தனையை பல்வேறு திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். அமெரிக்காவில் ஒரு ஏஜெண்டிடம் கொடுத்தால் இந்தியாவில் பக்காவாக வந்து சேர்ந்துவிடும். சின்னதாய் கமிஷன் மட்டும் கொடுத்தால் போதும். பணப் பரிமாற்றத்திற்கு ஒரு பாஸ்வேர்டு அவசியம்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம்
இத்தகைய பரிமாற்றம் பல்வேறு நாடுகளுக்கு இடையில் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையிலும் நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு விஷயம் தான் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தகவலறிந்து 150 அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையுடன் அமலாக்கத்துறை களத்தில் இறங்கியுள்ளது. ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை நடைபெறுவதால் கேரள மாநிலம் பரபரப்பிற்கு ஆளாகியிருக்கிறது.
கேரளாவில் ஹவாலா மோசடி
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 25 ஹவாலா ஏஜெண்டுகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் இந்திய ரூபாய் மட்டுமின்றி வெளிநாட்டு பணமும் கைமாறி இருப்பதாக தெரிகிறது.
அமலாக்கத்துறை ரெய்டு
அமலாக்கத்துறை சோதனையில் கொச்சியின் முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பென்டா மேனகா ஷாப்பிங் மாலில் மொபைல் உபகரணங்கள் விற்கும் கடை, பிராட்வே பகுதியில் உள்ள அழகு சாதனம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை, சங்கனச்சேரியில் உள்ள ட்ராவல் ஏஜென்சி, கோட்டயத்தில் உள்ள துணிக்கடை ஆகியவற்றில் ஹவாலா மோசடி நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொச்சி மாலில் அதிர்ச்சி
இதில் பென்டா மேனகா ஷாப்பிங் மாலில் மட்டும் தினசரி 50 கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்து வந்ததாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் பின்னணியில் அரசியல், வியாபாரம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளை சேர்ந்தவர்களின் பங்களிப்பு அதிகம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களை குறிவைத்து அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரகசிய ஏஜெண்ட்கள்
கேரளா மாநிலத்தில் இருந்து 80 நாடுகளுக்கு ஹவாலா பணப் பரிவர்த்தனை நடந்து வந்துள்ளது. அங்கெல்லாம் ஹவாலா ஏஜெண்டுகள் ரகசியமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே கேரளாவில் இன்று நடைபெறும் அதிரடி சோதனைகள் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பல கோடி ரூபாய் பணமும் கைப்பற்றக் கூடும் என்கின்றனர்.