உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டி நேற்று (19) ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமாகியது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் பத்தும் நிசங்க 76 பந்துகளில் 57 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 54 பந்துகளில் 52 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 63 பந்துகளில் 78 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 64 பந்துகளில் 74 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதேவேளை சரித் அசலங்க 23 பந்துகளில் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களை பெற்றதோடு வனிந்து ஹசரங்க 12 பந்துகளில் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 355 ஓட்டங்களை பெற்றது.
இதனைதொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணியின் வீரர்கள் வனிந்து ஹசரங்கவின் பந்துக்கு முகம்கோடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் அந்த அணி 39 ஓவர்களில் 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டிளில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் 8 ஓவர்களில் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வனிந்து ஹஸரங்க போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவாகினார்.
இதேவேளை இலங்கை அணி உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் அடுத்ததாக ஓமானை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) எதிர்கொள்ளவுள்ளது.