போன்களின் பேட்டரியை இனி பயனர்களே எளிதில் மாற்றும் வகையிலான புதிய விதிக்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்பெல்லாம் கைபேசியை பயன்படுத்தும் பயனர்கள் மிக எளிதில் அதன் பேட்டரியை மாற்றிவிட முடியும். கைபேசியின் பின்பக்கத்தை திறந்தாலே பேட்டரியை கழற்றி மாற்றி விடலாம். அது ஒரு காலம். ஆனால், இப்போது அப்படி இல்லை. பயனர்கள் தங்கள் கைபேசியில் பேட்டரியை மாற்றுவது மிகவும் சவாலான காரியம். இந்நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய விதியின் கீழ் அதனை முறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் மொபைல் போன் உட்பட எலக்ட்ரானிக் சாதன உற்பத்தி நிறுவனங்கள் பேட்டரிகளை பொறுத்த பசைகள் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பயனர்கள் எளிதில் பேட்டரியை கழற்றி மாற்றும் வகையில் இருக்க வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி உள்ளது.
இப்போது உள்ள போன்களில் பேட்டரியை மாற்ற வேண்டுமெனில் பயனர்கள் கைபேசி பழுது நீக்கும் வல்லுநர்களிடம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த புதிய விதியின் மூலம் அந்த தேவை பயனர்களுக்கு இருக்காது. அதே நேரத்தில் இது சூழலுக்கும் உதவும் என சொல்லப்படுகிறது. பசைகள் பயன்படுத்தக் கூடாது என்பது போன்களின் உற்பத்தி சார்ந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. அதாவது போன்களின் டிஸ்ப்ளே போன்றவை தற்போது பசை கொண்டு தான் ஒட்டப்பட்டு வருகின்றன. எனவே, இதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் பயனர்கள் போன்களை பழுது பார்ப்பதும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த புதிய விதியின் மூலம் பயன்படுத்தப்பட்ட போர்டபிள் பேட்டரிகளை சேகரிப்பதும் அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்த புதிய விதி செயல்பாட்டுக்கு வர 2027 வரை கூட ஆகலாம். இந்த மாற்றங்கள் ஐரோப்பிய யூனியன் சார்ந்த சந்தை மட்டுமல்லாது உலக சந்தையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், கடந்த 2021-ல் இதேபோல விதியை திருத்தி போர்டபிள் எலக்ட்ரானிக் சாதனங்களில் ஒரே வகையிலான டைப்-சி சார்ஜிங் போர்ட் இருக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்தது. தற்போது அது உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதுபோலவே இந்த பேட்டரி மாற்ற விதியும் இருக்கும்.