பிரித்தானிய-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானிய தூதுவர் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன, தனது பதவிக்காலம் முடிந்து செல்லும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கு நன்றி தெரிவித்தார்.

நேற்று (19) உயர் ஸ்தானிகரை அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உயர் ஸ்தானிகரின் தொடர்ச்சியான முயற்சிகள் பாராட்டுக்குரியவை என பிரதமர் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டு முதல் அவரது பதவிக்காலத்தில், பல்வேறு துறைகளில் ஈடுபட்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் தனித்துவமான பங்களிப்புகளையும் பிரதமர் பாராட்டினார். பிரதமர் தினேஷ் குணவர்தன வெளிவிவகார அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும் பதவி வகித்த காலத்திலும், தற்போதைய பிரதமராக இருந்த காலத்திலும் வழங்கிய ஆதரவானது இருதரப்பு உறவுகளுக்கு பெரும் பலமாக அமைந்ததாக உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்தினால் வழங்கப்படும் “அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் வர்த்தக முன்மொழிவுத் திட்டம் (DCTS)” என்ற கருப்பொருளைக் கொண்ட GSP திட்டத்தின் பயனாளி நாடாக இலங்கையை நியமிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம் குறித்து பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இலங்கை ஏற்றுமதிக்கு 92% வரிச் சலுகைகள் கிடைக்கும்.

கடன் மறுசீரமைப்பு செயன்முறை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை வழங்கியதன் பின்னர் ஐக்கிய இராச்சியம் புதிய முதலீட்டு திட்டங்களை ஆரம்பிக்கும் என இலங்கை நம்புவதாக தெரிவித்த பிரதமர், கல்வி, சுகாதாரம், வங்கி மற்றும் நிதிச் சேவைகள், தகவல் தொழிநுட்பம், வர்த்தக முகாமைத்துவம், சுகாதார சேவைகள்,ஹோட்டல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் முதலீட்டை அதிகரிக்குமாறு ஐக்கிய இராச்சியத்திற்கு அழைப்பு விடுத்தார்.

உயர் ஸ்தானிகர் பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் திருமதி ஹல்டனின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் கலந்து கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.