புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை வட்டத்திற்குள் இருந்த கிழக்கு ரயில்வே பொறியாளர் அமிர்கான் தலைமறைவு என்று செய்திகள் வெளியான நிலையில் அது உண்மையில்லை என தென்கிழக்கு ரயில்வே மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
உலகையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஏற்பட்டது. சுமார் 2 வாரங்கள் கடந்த பிறகும் அது குறித்த பரபரப்புகளும் சர்ச்சைகளும் செய்திகளும் வதந்திகளும் ஓயவில்லை. குறிப்பாக இந்த ரயில் விபத்தை வைத்து மத வெறுப்பை பரப்பும் செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
யஸ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஸ்டேஷனரி பொருட்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் மூன்றும் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ஒன்றோடு ஒன்று மோதி தடம் புரண்டன. இந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களே அதிகளவில் உயிரிழந்தனர். அந்த ரயில் கோல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டு இருந்ததது. தமிழ்நாட்டை சேர்ந்த 84 பயணிகள் அதில் பயணித்து உள்ளார்கள். மற்றொரு பயணிகள் ரயிலான யஷ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நோக்கி சென்று கொண்டு இருந்தது.
விபத்து ஏற்பட்டவுடன் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர், மீட்பு படையினர், போலீசாருடன் இணைந்து ஒடிசா மாநில மக்களும் களத்தில் இறங்கி உதவி மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான ஒடிசா மக்கள் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் வழங்க வரிசையில் காத்திருந்தனர். மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் பார்க்கப்பட்டது.
அதே சமயம் இந்த ரயில் விபத்தை வைத்தும் மத வெறுப்புணர்வை தூண்ட சிலர் முயற்சித்தனர். ரயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகே மசூதி ஒன்று இருப்பதாக சந்தேகத்தை தூண்டும் வகையில் சிலர் பதிவிட்டு வந்தார்கள். பின்னர் அது மசூதி அல்ல, இஸ்கான் கோயில் என்பது உறுதியானது. ஒடிசா காவல்துறையும் இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்து இருந்தது.
அதுபோல், விபத்து ஏற்பட்ட ரயில் நிலையத்தின் மேலாளர் ஒரு இஸ்லாமியர் என்றும் அவர் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த பாஜக ஆதரவாளரான செந்தில் குமார் என்பவர் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டதற்காக அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்த சிபிஐ, பராமரிப்பு பணி நடைபெற்று வந்ததால் ரயில் நிலையத்தின் அதிகாரி இண்டர்லாக்கிங் அமைப்பை அணைத்து வைத்து விட்டு பச்சை சிக்னல் கொடுத்ததாலேயே விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலை வெளியிட்டது.
இந்த நிலையில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருந்த அமிர்கான் என்ற ஜூனியர் பொறியாளர் அமிர்கான் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாக முக்கிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அவரது வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் செய்திகள் பரவின.
இந்த செய்திகளை வைத்து ட்விட்டரில் அமிர்கான் என்ற பெயர் டிரெண்டானது. அவரது பெயரை அடிப்படையாக வைத்து ஒரு தரப்பினர் விபத்துக்கு மதச்சாயம் பூசத்தொடங்கினர். பல்வேறு வெறுப்பு கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த செய்தி வதந்தி என்று தென் கிழக்கு ரயில்வே மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே தலைமை செய்தித் தொடர்பாளர் ஆதித்யா குமார் சவுத்ரி தெரிவிக்கையில், “பஹாங்காவை சேர்ந்த ரயில் ஊழியர் தலைமறைவு என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. அவற்றில் உண்மை இல்லை. அந்த ஊழியர் உட்பட அனைவருமே இங்குதான் உள்ளார்கள். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.” என்றார்.