புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அம்மாநில துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், டெல்லி மக்களின் பாதுகாப்பு, அதுகுறித்த நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு உரிய பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், “டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளன. இதுபோன்ற தீவிர குற்றச் செயல்கள் மீண்டும் மீண்டும் நடப்பது மக்களின் மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கைகளைக் குலைப்பதாக இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் டெல்லி மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பவர்கள் தங்களின் கடமையை மீண்டும் மீண்டும் தவறவிடக் கூடாது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், தேசிய தலைநகரில் சட்டத்தின் ஆட்சியையும், மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) கடந்த ஆண்டில் வெளியிட்ட அறிக்கை, உள்துறை அமைச்சகம், துணைநிலை ஆளுநருக்கு ஒரு தெளிவைக் கொடுத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அந்த அறிக்கையின்படி, நாட்டின் 19 மெட்ரோபொலிட்டன் நகரங்களில் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கும் குற்றங்களில் 32.20 சதவீதம் டெல்லியில் மட்டும் நடந்துள்ளது. உள்துறை அமைச்சகம், ஆளுநருமே இங்கு (டெல்லியில்) சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதற்கு நேரடி பொறுப்பாளிகள் என்ற பொழுதிலும், அப்படி எதுவும் இங்கே நடந்திருக்கவில்லை.
டெல்லியில் போலீஸார் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்பதற்காக தனியார் பாதுகாப்பு பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். டெல்லியில் சட்டம் – ஒழுங்கை பராமரித்து குற்றங்களைத் தடுப்பதற்கான பொறுப்பில் இருப்பவர்களின் பங்களிப்பு முற்றிலுமாக இல்லை என்று நான் கூறுகிறேன். எனவே, இந்த முக்கியமான பிரச்சினை குறித்து தாங்கள், அமைச்சர்களுடன் ஓர் அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்தபோதிலும் தேசிய தலைநகரம் என்பதால் டெல்லி காவல்துறையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.