பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என சமூக ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என 3.2.2009 அன்று அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக ஒதியம் கிராமத்தில் 30.28 ஏக்கர் நிலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குடும்பத்தினர் நிர்வகித்து வரும் ஆண்டிமுத்து- சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் தானமாக அரசுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் 4.2.2010 அன்று பெரம்பலூரில் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் ரூ.82 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரிக்கு கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார். அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது 14 ஆண்டுகள் கடந்தும், அந்த திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்தும் இத்திட்டம் தொடங்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. எனவே, இங்கு மருத்துவக் கல்லூரி அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் குன்னம் தொகுதி செயலாளர் ராஜோக்கியம் கூறியது: மிகவும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி மிகவும் அவசியம். பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி உள்ள நிலையில் நிகழாண்டு மேலும் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் போதிய முன்னேற்பாடுகளை செய்து மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறும்போது, தமிழக அரசு பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அனுமதியை பெறாதது ஏன்? என தெரியவில்லை என்றார்.
கருணாநிதி பெயர் சூட்டலாம்: புதிய பயணம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராகவன் கூறியது: சென்னை போன்ற பெருநகரங்களில் ஏராளமான உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், உயர் சிகிச்சை மருத்துவமனைகள் உள்ள நிலையில், தற்போது கிண்டியில் ரூ.150 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையை தமிழக அரசு திறந்துள்ளது.
அனைத்து வசதிகளும் குவிந்து கிடக்கும் சென்னையில் மீண்டும், மீண்டும் இதுபோன்ற உயர் சிகிச்சை மருத்துவமனைகளை அமைப்பதற்குப் பதிலாக, மிகவும் பின்தங்கிய பகுதியான பெரம்பலூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைத்திருக்கலாம்.
தற்போது இம்மாவட்ட மக்கள் அவசர, உயர் சிகிச்சைகளுக்காக திருச்சி, தஞ்சாவூர் போன்ற அண்டை மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த காலதாமதத்தால், பலர் சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழந்துவிடுகின்றனர். எனவே, பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்தால் சிகிச்சைக்கான நேர விரயம் தவிர்க்கப்பட்டு, பெரும்பாலான உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்றார்.
மிக விரைவில் அமையும்: பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன் கூறியது: தமிழகத்தில் மேலும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது. அந்த பட்டியலில் பெரம்பலூர் மாவட்டத்துக்கான அரசு மருத்துவக் கல்லூரிதான் முதலிடத்தில் உள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் மிக விரைவில் பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்றார்.