தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பத்திரிகை துறையில் நீண்ட காலமாக பணியாற்றி சமுதாய விழிப்புணர்விற்காக பாடுபட்டு பணியில் இருந்து ஓய்வு பெற்று வறுமை நிலையில் உள்ள பத்திரிகையாளர்களின் சமூகப் பணியை கருத்தில் கொண்டு நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு நிதியுதவி அளிக்க வகை செய்யப்பட்டது.
மாதாந்திர ஓய்வூதியம்
இதையொட்டி மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 14.04.1986ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. முதலில் 250 ரூபாய் மாதம் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து 5000 ரூபாய், 8000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் ஆனது. இந்நிலையில் செய்தித்துறை அமைச்சர், 2023-24ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் 10.4.2023 அன்று
செய்தித்துறை மானியக் கோரிக்கை
நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில் “முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்திரிகையாளர் ஓய்வூதியம் மாதம் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்தார். அரசின் பரிசீலனைக்குப் பின்னர், செய்தித்துறை அமைச்சர் அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு,
பத்திரிகையாளர்களுக்கு மகிழ்ச்சி
தற்போது பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.10,000/-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கான கூடுதல் செலவினத்திற்கு ரூ.1,58,88,000-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு ஆணையிடுகிறது. இந்த செலவினம் ஒரு “புது துணைப் பணி” (New Instrument of Service) குறித்த செலவினமாகும்.
எதிர்பாரா செலவின நிதி
இதற்கு சட்டமன்றப் பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். இதன் ஒப்புதலை எதிர்நோக்கி செலவினம் முதல்கட்டமாக எதிர்பாராச் செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கிற ஆணைகள் நிதித் துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இந்த செலவினம் சேர்க்கப்பட்டு சட்டமன்ற பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு,
செய்தித்துறை இயக்குநருக்கு உத்தரவு
எதிர்பாரா செலவின நிதியில் இருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பத்தை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963-ல் உள்ள அட்டவணை “A” படிவத்துடன் இந்த அரசாணையின் நகலுடன் இணைத்து நிதித் துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.