பாஜகவின் சர்வாதிகாரம் காட்டுத் தீ போல பரவுகிறது.. இந்தியாவிற்கே கேடு.. ஆவேசமாக சீறிய ஸ்டாலின்!

திருவாரூர்:
பாஜகவின் சர்வாதிகாரம் காட்டுத் தீ போல பரவுகிறது எனக் கூறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியாவுக்கே கேடான கட்சி பாஜக என்று ஆவேசமாக தெரிவித்தார்.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர். இந்நிலையில், இங்குள்ள காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், மாபெரும் ஆளுமையாகவும் வலம் வந்தவர் கருணாநிதி. இதன் காரணமாகவே, கருணாநிதியை சிறப்பிக்கும் விழா என்றதும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உடனே வந்துவிட்டார். வரும் 23-ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாக்கக்கூடிய பணியை பீகார் தொடங்கிவிட்டதற்கான சமிக்ஞை தெரிய தொடங்கியுள்ளது.

இன்றைக்கு இந்தியாவில் பாஜக தலைமையிலான ஆட்சியில் சர்வாதிகாரம் காட்டுத் தீ போல பரவி வருகிறது. ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு போன்றது. சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ போன்றது என அன்றைக்கே கருணாநிதி சொன்னார். அதை இன்றைக்கு பாஜக நிரூபித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக பரவி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை அணைக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது.

இதில் எனது பங்களிப்பாக, நானும் பாட்னாவில் நடைபெறும் மதசார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறேன். கருணாநிதியின் தளபதியாக பாட்னாவுக்கு செல்கிறேன். இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடியான காலக்கட்டத்தில் நாம் இன்று இருக்கிறோம். இதை செய்யாவிட்டால் பல ஆயிரம் பழமைவாய்ந்த தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.