இம்பால்: மணிப்பூர் கலவர விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்பட 10 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளன.
கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் தற்போது வரை 105 பேர் வரை வன்முறையில் சிக்கி பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறையில் பாதிக்கப்பட்ட 47 ஆயிரம் பேர் 372 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 50 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். எனினும், வன்முறை குறைந்தபாடாக இல்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா மே மாதம் 29ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை மணிப்பூர் மாநிலத்திலேயே நான்கு நாட்களாக முகாமிட்டார். மாநில டிஜிபி டோங்கலை நீக்கி விட்டு, அவருக்குப் பதிலாக ராஜீவ்சிங் நியமிக்கப்பட்டார். எனினும் மாநிலத்தில் வன்முறை குறைந்தபாடில்லை.
அமைதியை நிலை நாட்ட ஆளுநர் ‘அனுசுயா உய்கே’ தலைமையில் ஒரு குழுவை கடந்த 10ம் தேதியன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைத்தார். ஆனால், பிரபல நாடகக் கலைஞர் ரத்தன் தியாம், பிரபல நடிகரும் இயக்குநருமான மகோன்மணி மோங்சபா உள்ளிட்டோர் குழுவிலிருந்து விலகினர். அதேபோல குக்கி சமூகத்தினர், அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்கள் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று விலகிக்கொண்டது.
கலவரம் தொடங்கி ஒன்னறை மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து எதுவும் பேசவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையான 18ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 102வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, 1975 எமர்ஜென்சி குறித்தும், தற்போதைய பிபர்ஜாய் புயலை எதிர் கொண்டது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், மணிப்பூர் கலவரம் குறித்து எதுவும் பேசவில்லை.
எனவே ஆத்திரமடைந்த மக்கள் மன் கீ பாத் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக கூறி ரேடியோக்களை ரோட்டில் போட்டு உடைத்தனர். பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளன. அதில் மணிப்பூர் விவகாரத்தில் விரைவில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
காங்கிரஸ், ஜேடி(யு), சிபிஐ, சிபிஎம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி , அகில இந்திய பார்வர்டு பிளாக், தேசியவாத காங்கிரஸ் கட்சி , சிவசேனா (யுபிடி), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த கடிதத்தில், “மாநிலத்திலும், மத்தியிலும் உள்ள அரசால் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மணிப்பூர் முதலமைச்சர்தான் இந்த பிரச்னை உருவாக முக்கிய காரணம். துப்பாக்கிச்சூட்டை உடடினயாக நிறுத்த வேண்டும், அனைத்து குழுக்களும் நிராயுதபாணியாக்கப்பட வேண்டும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்கு வந்து சென்ற பின்னர் கூட இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. பிரதமரும் இது குறித்து மவுனம் காத்து வருகிறார். மணிப்பூர் கலவர விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி உடனடியாக தலையிட வேண்டும். அனைத்து சமுதாய மக்களுடனும் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை போதுமானதாக இல்லை. உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுடைய கணக்குகளை விரிவாக எடதது அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கடிதத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஒரு வியூகத்தை வகுத்தது. அதன்படி, மைத்தேயி/மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இவர்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 53 சதவிகிதமாவார்கள். இந்த வாக்குறுதி பலனளித்தது. பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
அதன் பின்னர் மைத்தேயி/மெய்டெய் மக்கள் பழங்குடி அந்தஸ்து கேட்டு போராட, பழங்குடியினரான குக்கி, நாகா மக்கள் இதற்கு எதிரான போராட்டத்தை தொடங்கினர். இதுதான் கலவரத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.