திருவாரூர்: “மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும், இந்திய நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் கேடாக முடியும்” என்று கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் பேசியது: “கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக பிஹார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ்குமார் வருவதாக இருந்தது. ஆனால், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால், வர இயலவில்லை. எனவே, இன்று காலையில் என்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், அவர் இன்று நிகழ்த்துவதாக இருந்த உரையை, தமிழாக்கம் செய்து நம்முடைய திருச்சி சிவா இங்கே வாசித்தார். அந்த உரை மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.பிஹார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி வந்திருக்கிறார். அவருக்கு இந்த நேரத்திலே என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஆகஸ்ட் 15, விடுதலை நாள் அன்று மாநில முதல்வர்கள் எல்லாம் கொடி ஏற்ற வேண்டும் என்று இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. அதேபோல் இந்திய அரசியலில் 1971 முதல் அனைத்து அரசியல் பெரு மாற்றங்களுக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் அவர்தான். இந்திரா காந்தி அம்மையார் தொடங்கி அத்தனை இந்தியப் பிரதமர்களுடனும் நல்லுறவை வைத்திருந்தவர் கருணாநிதி. ஆட்சி மாற்றத்துக்கும் – பிரதமர்களை உருவாக்குவதிலும் அவரின் பங்கு பெரும் பங்காக இருந்துள்ளது.
சஞ்சீவி ரெட்டி முதல் பிரதீபா பாட்டீல் வரை எல்லா குடியரசுத் தலைவர்களுடனும் நட்பு வைத்திருந்தவர். அவரால் உருவாக்கப்பட்ட குடியரசுத் தலைவர்கள் அதிகம். கருணாநிதி குடியிருந்த கோபாலபுரம் இல்லத்துக்கு பிரதமர்களும், அகில இந்திய அரசியல் தலைவர்களும், பிற மாநில முதல்வர்களும் அதிகமாக வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்திய அரசியலில் மாபெரும் அரசியல் ஆளுமையாக இருந்த தலைவர் அவர். அதனால்தான் அவரது புகழைப் போற்றுவதற்காக பிஹாரில் இருந்து தேஜஸ்வி வருகை தந்திருக்கிறார். இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கக்கூடிய பொறுப்பை ஏற்று அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியை பிஹார் தொடங்கியிருக்கிறது.
வருகிற 23-ம் தேதியன்று பிஹார் மாநிலம், பாட்னாவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடக்க இருக்கிறது. பாட்னா என்பது இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்றாகும். பாடலிபுத்திரம் என்று வரலாற்றில் அழைக்கப்படக்கூடிய நகரம்தான் இன்றைய பாட்னா. அறிவு மற்றும் ஞானத்தின் அடையாளமாகச் சொல்லப்பட்ட நகரம் அது.‘ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ’- என்று சொன்னார் கருணாநிதி.
பாஜக கடந்த பத்தாண்டு காலமாகப் பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை நிதிஷ்குமார் தொடங்கி வைக்க இருக்கிறார். நானும் பாட்னா செல்கிறேன். உங்களுடைய அன்போடு செல்கிறேன். உங்களுடைய நம்பிக்கையோடு செல்கிறேன். ஜனநாயகப் போர்க்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நானும் பங்கெடுக்க இருக்கிறேன்.
இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதைச் செய்யாவிட்டால் மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுப் பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். இன்னும் சொல்கிறேன். கருணாநிதியின் உயிரினும் உயிரான உடன்பிறப்புகளே, இங்கே அமர்ந்திருக்கிறீர்களே, அவருடைய உடன்பிறப்புகள் இதனை நீங்கள் செய்யாவிட்டால் வேறு யாராலும் இதனைச் செய்ய முடியாது.
மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் , இந்திய நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் அது கேடாக முடியும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழகத்தில் எப்படி ஒருமுகமாக இருந்து செயல்படுகிறோமோ, செயல்பட்டு வெற்றியைப் பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் அகில இந்திய அளவில் ஏற்பட்டாக வேண்டும்.
வெற்றி வேண்டும். வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும். அதனுடைய முன்னோட்டமாகத் தான் பிஹார் மாநிலத்தில் நடைபெறவுள்ள கூட்டம் அமையவிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் கருணாநிதியின் உடன்பிறப்புகளே, நாம் ஒருதாய் மக்கள். அந்த உணர்வோடு பணியாற்றி அவரின் கனவுகளை நிறைவேற்றுவோம். அவருக்கு நான் மட்டும், மகனல்ல. நீங்கள் அனைவரும் கருணாநிதியின் பிள்ளைகள்தான். கொள்கைவாதிகள் தான், கொள்கை வாரிசுகள்தான். அடக்குமுறை ஆதிக்கங்களுக்கு எதிரான திராவிடத்தின் வாரிசுகளான நாம் இந்தியா முழுமைக்குமான அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம்” என்று அவர் பேசினார்.
முன்னதாக, திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார்.