வேதாரண்யம்: 10ஆம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் 2ஆவது இடம் பிடித்த தன்னை விஜய் கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என அந்த மாணவி குமுறியுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த 17ஆம் தேதி 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை விஜய் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்திருந்தனர். இந்த விழா நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் வந்திருந்தனர். அந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்த விழாவை காலை 11.30 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை நடந்ததாக தெரிகிறது. இந்த விழாவில் விஜய் மக்கள் நிர்வாகிகள் சொதப்பியதால் விஜய் அவர்களை கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 13 மணி நேரம் விஜய் எதையும் சாப்பிடாமல் கால் கடுக்க நின்றிருந்தார். கடைசி மாணவர் வரை அனைவரையும் சாப்பிட வைத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் அவர் தனது வீட்டுக்கே சென்றார்.
விஜய்யின் இந்த முன்னெடுப்பை பலர் பாராட்டி வரும் நிலையில், நல்ல மதிப்பெண்கள் பெற்றும் சில மாணவிகளை அழைக்கவே இல்லை என பலர் வேதனை தெரிவிக்கிறார்கள். ஒரு மாணவி விழா நடைபெறும் இடத்திற்கே வந்து வாக்குவாதம் செய்து கண்ணீர்விட்டார். அவர் கூறுகையில் நான் 597 மதிப்பெண்கள் பெற்றேன். எப்படியும் நான் 3ஆவது இடத்திலாவது என் தொகுதியில் இருப்பேன்.
ஆனால் என்னை அழைக்கவில்லை, நான் எடுத்த மதிப்பெண்களை எடுத்த என் தோழி விழாவில் இருக்கிறார். இது குறித்து விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு போன் செய்தேன். மெயிலும் அனுப்பினேன்.எந்த பதிலும் வரவில்லை. பின்னர் இன்றைக்கு எதையும் செய்ய முடியாது. 2 நாட்கள் கழித்து பனையூர் அலுவலகத்திற்கு வாங்க. கண்டிப்பாக பரிசு கிடைக்கும் என்று கூறி அந்த மாணவியை அனுப்பி வைத்தனர்.
இவரை போல் வேதாரண்யத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அழைப்பு விடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் என் பெயர் லட்சுதா, நான் வேதாரண்யத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண்களுடன் மாநில அளவில் 2ஆம் இடமும் நாகை மாவட்டத்தில் முதல் இடமும் வேதாரண்யம் தொகுதியில் நான் முதலிடம். என்னை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டினார்.
விஜய் என்னை அழைத்து பாராட்டுவார் என நினைத்தேன். ஆனால் என்னை அழைக்கவே இல்லை. எனக்கும் என் கிராமத்தினருக்கும் இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக அந்த மாணவி வேதனை தெரிவித்தார்.