சென்னை:
பாஜகவுக்கு சாதகமான கட்சியாக நாம் தமிழர் இருக்கிறது என ஏற்கனவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைக்கு சீமான் கூறியுள்ள கருத்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.
தமிழ்நாட்டில் சாதாரண கட்சியாக இருந்து இன்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாறியிருக்கும் கட்சி நாம் தமிழர். 2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 1.1 சதவீத ஓட்டுகளை பெற்ற நாம் தமிழர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளை பெற்று நான்காவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றிருப்பது சாதாரண விஷயம் அல்ல.
இந்த வெற்றிக்கு பின்னால் சீமான் என்ற ஒற்றை மனிதர் தான் காரணம் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் சீமான் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம்தான் நாம் தமிழரின் இந்த வீச்சுக்கு காரணம் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், நாம் தமிழர் மீது மற்றொரு பெரிய விமர்சனமும் இருந்து வருகிறது. பாஜகவின் பி டீம் (B Team) ஆக அக்கட்சி இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஒரு கட்சிக்கு பி டீம் என்றால் அக்கட்சிக்கு சாதகமாக இருப்பது என அர்த்தம் அல்ல. ஒரு பெரிய கட்சியை எதிர்த்து அரசியல் செய்து, அக்கட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதுதான் பீ டீம் கட்சி என அழைக்கப்படுகிறது.
வட மாநிலங்களில் அசாதுதீன் ஒவைசியை பாஜகவின் பீ டீம் என்றுதான் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அதேபோல, தமிழ்நாட்டில்
மீது பாஜக பீ டீம் சாயம் பூசப்பட்டுள்ளது. இந்து கடவுள்களை அரசியல் ரீதியாக முன்வைப்பது; ஜாதிகளை மையப்படுத்தி கருத்து தெரிவிப்பது என அவரது சில செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து சீமானை பாஜகவின் பி டீம் என சில கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து சீமான் கூறுகையில், “நான் பாஜகவை பின்பற்றவில்லை. பாஜகதான் என்னை பின்பற்றுகிறது. நான் முருகனை கும்பிட்டால், பாஜகவுக்கு முருகனை கும்பிடும். நான் ‘தமிழ்பாட்டன்’ என்று சொன்னால், பாஜக ‘இந்து மன்னன்’ என்று சொல்லும். பாஜக என்னுடைய மறு உருவமாக இருக்கிறது” என்றார்.