சென்னை:
பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அசத்தலான திட்டம் ஒன்றை தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிவித்திருக்கிறார். இனி இரவில் தனியாக வரும் பெண்கள் ஒரே ஒரு போன் பண்ணாலே போதும்.. அடுத்த நிமிடம் போலீஸே வந்து அவர்களின் வீடு வரை வந்து விட்டுவிட்டு போய்விடும் சூப்பர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும், வன்முறைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. எந்த மாநிலமும் இதற்கு விதிவிலக்கு இல்லை. தமிழகத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே இருக்கிறது. தனியாக வரும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது, காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக் கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என எண்ணும் பெண்கள், காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 004 -23452365 மற்றும் 044-28447701 ஆகியவற்றை அழைக்கலாம்.
காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்துக்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை இலவசம் ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இளம்பெண்கள் பலர் இரவு வரை பணி முடிந்து வீடு திரும்புகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஒருவித அச்ச உணர்வுடனேயே வீடு சென்று சேர்கிறார்கள். அதுபோன்ற பெண்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.