திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பழக்கடையில் பணம் திருடிய எலியைக் கண்டு, கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் எலி பணத்தை பதுக்கிய பொந்தில் இருந்து ரூ.1500 மீட்கப்பட்டது.
திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இக்கடையில் இவரிடம் 5 பணியாட்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடையில் வியாபாரம் செய்த பணம் சிறுகச்சிறுக மாயமானதால், கடையில் சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணித்தார் மகேஷ்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையில் வியாபாரம் செய்து வைத்திருந்த பணம் மாயமானது. குறிப்பாக இரவு நேரங்களில் வியாபாரம் செய்து வைக்கும் பணம், காலை நேரத்தில் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடையின் அருகே உள்ள பொந்தில் உள்ள எலி ஒன்று பணத்தாள்களை லாவகமாக எடுத்துச்சென்று அந்த பொந்தில் வைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த எலி நாள்தோறும் ரூ.100 மற்றும் ரூ.50 தாள்களை எடுத்துக்கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பொந்தை சோதனையிட்டபோது, ரூ.500 தாள் உட்பட மொத்தம் ரூ. 1500 இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் மகேஷ். கடந்த 2 நாட்களாக அதிகாலை 4 மணிக்கு பொந்தில் இருந்து வரும் எலி, கல்லாபெட்டியில் வைக்கப்பட்ட பணத்தை எடுத்தும் செல்லும் காட்சியை சிசிடிவியில் பார்த்து அதிர்ச்சி கலந்த வேதனை அடைந்தார் மகேஷ். வழக்கமாக, பழக்கடைகளில் பழத்தை திருடும் எலி, பணத்தாள்களை எடுத்துக்கொண்டு சென்றது பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த எலி இன்னும் சிக்காததால், இந்த விஷயம் அக்கம் பக்கது கடைக்கார்களுக்கு பரவ, அவர்கள் எலியை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.